

சென்னை
நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபரின் மகன் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் பரத் (23). இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் விநியோகிப்பாளராக (டெலிவெரி பாய்) பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை உணவு வாங்குவதற்காக நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது ஸ்டெர்லிங் சாலையில் இருந்து அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலைக்குச் சென்றுள்ளது.
திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய அந்த சொகுசு கார் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் மீதும் அங்கு நடைபாதையில் நின்று கொண்டிருந்த பரத் மீதும் அடுத்தடுத்து மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பரத் அந்த வழியாக சென்று கொண்டிருந்த மினி லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தறிகெட்டு ஓடிய கார் அங்குள்ள கடை ஒன்றில் மோதி நின்றுள்ளது. இதைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து குறித்து உடனடியாக போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பாண்டிபஜார் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து காயம் அடைந்த பரத்தை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் காரை ஓட்டிச் சென்றதாக வளசரவாக்கத்தை சேர்ந்த சூர்யா (24) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்கு காரணமான காரில் இருந்து பிரபல நடிகை ஒருவர் இறங்கி ஓட்டம் பிடித்ததாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, நடிகை யாரும் அந்த காரில் வரவில்லை என்றும் கைது செய்யப்பட்ட சூர்யா பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகன் எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.