

சென்னை
தாய் உணவு ஊட்டியபோது 3-வது மாடியிலிருந்து தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஏழுகிணறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொண்டித்தோப்பு, சரவண முதலி தெருவைச் சேர்ந்தவர் அருண். பாரிமுனையில் ஜவுளிக்கடை வைத்து உள்ளார். இவரின் மனைவி ஜெய. இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை பூமி. இவர்கள் 3-வது மாடியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஜெயஸ்ரீ, 3-வது மாடி பால்கனியில் இருந்தபடி தனது குழந்தை பூமிக்கு உணவு ஊட்டியுள்ளார். அப்போது, குழந்தை சாப்பிட மறுத்து திமிறியுள்ளது. அப்போது, திடீரென தாயின் கையில் இருந்த குழந்தை பூமி, 3-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதற்கிடையில் குழந்தை பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியது.
தகவல் அறிந்து ஏழுகிணறு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி குழந்தை பூமி உயிரிழந்துள்ளது. குழந்தை இறப்பு குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.