இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார்: அமமுகவினர் திமுகவில் இணையும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

இன்பதுரை துன்பதுரை ஆகிவிட்டார்: அமமுகவினர் திமுகவில் இணையும் விழாவில் ஸ்டாலின் பேச்சு
Updated on
1 min read

சென்னை

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை காரணமாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகிய புதுக்கோட்டை முன்னாள் மாவட்டச் செயலாளர் பரணி கார்த்திக் தலைமையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்த விழா சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், ''இனி யாரும் எனக்கு சால்வை, பூங்கொத்துகளை அளிக்க வேண்டாம், புத்தகங்களை வழங்குங்கள். திமுக என்பது ஜனநாயகக் கட்டமைப்பு கொண்ட கட்சி. பிற கட்சிகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்த ஆட்கள் இல்லை, ஆனால் திமுகவில் அப்படிப்பட்ட சூழல் இல்லை.

சூழ்ச்சி மூலமாகத்தான் அதிமுக வெற்றி பெற்றது. முறையாகத் தேர்தல் நடந்திருந்தால், இந்நேரம் திமுக ஆட்சியில் இருந்திருக்கும். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே அதிமுகவுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பிறகு அதிகாரிகள் என்ன செய்வார்கள்?

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை காரணமாக அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, துன்பதுரை ஆகிவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நாங்குநேரி, விக்கிரவாண்டி, ராதாபுரம் என 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை திமுக கூட்டணி பெறும்.

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கு கொடுமையானது. அந்த வழக்கைத் திரும்ப பெற வேண்டும். விரைவில் உள்ளாட்சி தேர்தல் என்பது "வரும்; ஆனால் வராது" என்னும் திரைப்பட வசனம் போல் இருந்து வருகிறது'' என்றார் ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in