ஓடும் பேருந்தில் நடத்துனரை தாக்கிய காவலர்கள்: நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு

ஓடும் பேருந்தில் நடத்துனரை தாக்கிய காவலர்கள்: நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை

ஓடும் பேருந்தில் பயணச்சீட்டு கேட்ட நடத்துனரை தாக்கிய 2 காவலர்களை நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 29-ம் தேதி குமிழியிலிருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றது. மாலை 4 மணியளவில் திருநெல்வேலியிலிருந்து சீருடை அணிந்த இரண்டு காவலர்கள் அப்பேருந்தில் ஏறியுள்ளனர். மூன்றடைப்பு அருகே பேருந்து வரும்போது பேருந்து நடத்துநர் ரமேஷ் டிக்கெட் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் தாங்கள் போலீஸ் எனக் கூறியுள்ளனர். போலீஸ் என்றால் வாரண்ட் காப்பியைக் காண்பிக்கும்படி நடத்துநர் கேட்டுள்ளார். ரமேஷ் வாரண்ட் காப்பி கேட்டபோது ஆத்திரமடைந்த காவலர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காவலர்கள் இருவரும் நடத்துநரை சரமாரியாக தாக்கியது தெரியவந்தது.

இந்தத் தாக்குதலில் நடத்துநர் ரமேஷ் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்த பயணிகள் நடத்துநருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதைப் பேருந்தில் அமர்ந்திருந்த பயணி தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்தப் பதிவை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது.

மூன்றடைப்பு காவல் நிலையத்தில் நடத்துனர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்துனரை தாக்கிய, நெல்லை ஆயுதப்படையைச் சேர்ந்த மகேஷ் மற்றும் தமிழரசன் இருவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்காக எடுத்துள்ளது. அதன்பேரில், நடத்துனரை தாக்கிய காவலர்கள் மகேஷ், தமிழரசன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி சர்க்யூட் ஹவுஸில் வருகிற 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆஜராக காவலர்கள் இருவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in