

புதுடெல்லி
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி மீதான புகார்கள் குறித்து சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த வர் விஜய கம்லேஷ் தஹில் ரமானி. அடுத்த ஆண்டு பணி ஓய்வுபெற விருந்த இவரை கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி 3 நீதிபதிகள் அடங்கிய மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்த இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி வி.கே.தஹில் ரமானி விடுத்த கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்தது. இதில் மனவேதனை அடைந்த அவர் கடந்த 6-ம் தேதி தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா கடிதத்தை ஏற்ற குடியரசுத் தலைவர் கடந்த 21-ம்தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்தார்.
இந்நிலையில் தஹில் ரமானிக்கு எதிராக மத்திய உளவுத் துறை 5 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அளித்துள்ளதாகத் தெரிகிறது. அவர் சொத்துகள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த புகார்கள் குறித்து சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த சிபிஐ-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. -பிடிஐ