சென்னையுடன் ஒன்றிவிட்டேன் இனி இங்கேதான் வாழப்போகிறேன்:  முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி 

சென்னையுடன் ஒன்றிவிட்டேன் இனி இங்கேதான் வாழப்போகிறேன்:  முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி 
Updated on
1 min read

சென்னை

சென்னையின் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போய்விட்டது, இனி இங்கேதான் வாழப்போகிறேன் என முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பிரிவு உபச்சார விழாவில் சென்னையை புகழ்ந்து தள்ளினார்.

பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தலைமையில் நடந்த விழாவில் நிகழ்ச்சியில், நீதிபதிகள் மணிக்குமார், எம்.எம்.சுந்தரேஷ், எம்.எஸ்.ரமேஷ், ஜெயசந்திரன், தண்டபாணி, பாரதிதாசன், சதீஷ்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தலைமை உரையில் பேசிய மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ” “ஓய்வுபெற்ற பிறகு எந்த பதவியும் ஒதுக்க வேண்டாம் என மஹாராஷ்டிரா மற்றும் தமிழக அரசுக்கு தஹில் ரமானி கடிதம் எழுதியுள்ளார்” என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.மணிக்குமார் பேசும்போது, “நீதிபதிகள் தரப்பிலிருந்து எந்த குறிப்புகள் அனுப்பினாலோ, கோரிக்கை வைத்தாலோ உடனடியாக பரிசீலித்து முடுவெடுப்பார். அனைத்து நீதிபதிகளிடம் சகோதர மனப்பான்மையுடன் பழகியவர்” என பாராட்டு தெரிவித்தார்.

விழாவில் கலந்துக்கொண்ட பலரும் பாராட்டிப்பேசினர், பின்னர் ஏற்புரை நிகழ்த்திய முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேசியதாவது:

“எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக கடந்த இரண்டுவாரகாலமாக எனக்கு ஆதரவளித்த, பேசிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஓராண்டாக சென்னையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிப்போய்விட்டேன்.

என்னுடைய 60 ஆண்டுகால வாழ்க்கையில் நான் சென்னைக்கு வராமல் தவிர்த்ததே இல்லை. முக்கியமாக திருப்பதி பாலாஜி கோவிலுக்கு வரும்போதெல்லாம் சென்னைக்கு வராமல் போனதே இல்லை. ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர நான் தவறாமல் சென்னைக்கு வந்துவிட்டுத்தான் செல்வேன். அதனால் எனக்கு எப்போதும் சென்னையுடன் ஒரு பிடிமானம் உண்டு.

ஆனால் கடந்த ஓராண்டாக சென்னை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. காரணம் மும்பையை ஒப்பிடும் போது இங்குள்ள சீதோஷ்ண நிலை, அங்குள்ளது போன்று தொடர் மழை வெள்ளம் இல்லாதது, அதுமட்டுமல்ல நல்ல சூழ்நிலை, குறைந்த மாசு, அதிக சுத்தம், சிறப்பான உட்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.

சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுதும் இப்படித்தான் உள்ளது. அதனால்தான் நானும் என் கணவரும் சென்னையிலேயே குடியேறுவதென முடிவு செய்துவிட்டோம். சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால்தான், இங்கு வீடு வாங்கியுள்ளோம்.

கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் 5040 வழக்குகளை முடித்து வைத்தது நியாயமாகவே தான் கருதுகிறேன். அதற்கு உறுதுணையாக இருந்த நீதிபதி எம்.துரைசாமிக்கு நன்றி. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நன்றி. தலைமை நீதிபதியாக இருந்த போதும், இடமாற்ற உத்தரவுக்கு பிறகும் ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி”.

இவ்வாறு முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in