

சென்னை
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதையைப் பாடமாக வைப்பதை தான் வரவேற்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்பில் பகவத் கீதை, தத்துவவியல் ஆகிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில் யோகா, பல்வேறு உபநிடதங்கள், உலகம் தோன்றியது எப்படி, ஆசிரியர் மற்றும் மாணவருக்கு இடையேயான உறவு, பேச்சுக்கும் சுவாசத்துக்குமான புரிதல், மனதை வெற்றிகொள்வது குறித்து கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்ன அறிவுரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாடத்திட்டத்தில் உள்ளன. இவை அனைத்தும் தத்துவவியல் பாடத்துக்குள் வருகின்றன.
பாடத்திட்டம் சாரா கூடுதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக தத்துவவியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழும அறிவுறுத்தலின்படியே இப்படிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து நேற்று (செப்.25) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், "பகவத் கீதையை பொறியியல் மாணவர்களுக்குக் கற்றுத் தருவதை வரவேற்கிறேன். இதனைப் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருந்தால் நல்ல விஷயம். பகவத் கீதையை பண்பாடு சார்ந்த புத்தகமாகப் பார்க்கிறேன். மதம் சார்ந்த புத்தகமாகப் பார்க்கவில்லை. பாரதப் பண்பாட்டுக்கு ஆழமான நங்கூரமாக இருப்பது பகவத் கீதை. அதனை பொறியியல் மாணவர்களுக்கு பாடமாக வைப்பது நல்ல விஷயம், அதனை நான் வரவேற்கிறேன்" எனத் தெரிவித்தார்.