‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி; நூல் வாசிப்பு ஐஏஎஸ் தேர்வை எளிமையாக்கும்: ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை

`இந்து தமிழ்' நாளிதழ் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் சேலம் மூவேந்தர் அரங்கில் நேற்று நடைபெற்ற 'ஆளப்பிறந்தோம்' வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களிடையே ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்.
`இந்து தமிழ்' நாளிதழ் மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் சேலம் மூவேந்தர் அரங்கில் நேற்று நடைபெற்ற 'ஆளப்பிறந்தோம்' வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களிடையே ரயில்வே டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்.
Updated on
2 min read

சேலம்

அதிகமான நூல்களை வாசிக்கும் பழக்கம் ஐஏஎஸ் தேர்வை எளிமையாக்கும் என ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ ஆகியன சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற தலைப்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சேலம் மூவேந்தர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரயில்வே காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

ஐஏஎஸ் தேர்வுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. இத்தேர்வை பட்டப் படிப்பு படித்த அனைவரும் எழுதலாம் என்பதே. பொருளாதாரத்தில் பின்தங்கிய வர்களும், ஆங்கிலம் தெரியாதவர்களும் கூட ஐஏஎஸ் தேர்வை எழுதலாம். நேற்று வரை நீங்கள் யாராக இருந்திருந்தாலும், இக்கணத்தில் இருந்து நீங்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றிடுவோம் என ஆழ்மனதில் அதற்கான எண்ணத்தை உருவாக்கி, உழைக்கும் முயற்சிக்கு வித்திட்டால் கண்டிப்பாக உங்களின் ஐஏஎஸ் கனவு நிஜமாகும்.

மிகவும் வறுமையில் இருந்த பலரும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் நான் பயிற்சி அளித்துள்ளேன்.

தாய், தந்தை, சகோதர, சகோதரியின் ஆசையை நிறைவேற்றிட வேண்டி நீங்கள் ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்றால் நிச்சயம் முடியாது. உங்களுக்குள் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றினால் மட்டுமே உங்களால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி வாகை சூட முடியும்.

பதவி, புகழ், பொருளுக்கு ஆசைப் படக்கூடிய விஞ்ஞானிகள், அறிஞர்கள், பெரும் தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சைக்கிள் கடை வைத்திருந்த ‘ரைட் சகோதரர்கள்’ தான் விமானத்தை கண்டுபிடித்தனர். அனைத்து மக்களும் விமானத்தில் பயணப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருந்ததாலே, விமானத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

அதேபோல, நான் ஏன் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தில் நாட்டுக்கு என்னால் நல்லது செய்ய முடியும், மக்களுக்கான சேவையை திறம்பட ஆற்றிட வேண்டும் என்ற பொதுநோக்கு சிந்தனையாளர்களால் மட்டுமே ஐஏஎஸ் தேர்வில் எளிதில் வெற்றியடையமுடியும்.

தினமும் ஒரு மணி நேரம் ஆங்கிலம், தமிழ் தினசரி செய்தித்தாளை படிக்க வேண்டும். அப்போதுதான் பொது அறிவும், நாட்டு நடப்புகளையும் அறிந்து கொண்டு, போட்டித் தேர்வுக்கு தயாராக முடியும். அதிகப்படியான நூல்களை வாசிப்பதன் மூலம் ஐஏஎஸ் போட்டித் தேர்வு எளிமையாகும். கடினம் என்று நீங்கள் நினைத்து விட்டால் நிற்பதும், நடப்பதும், சுவாசிப்பதும்கூட கடினமாகிவிடும். எளிது என எண்ணிவிட்டால் எல்லாமே எளிதாகிவிடும். உங்களது எண்ணங்கள் தான் நீங்கள் யார் என்பதை தீர்மானிக்கிறது. எனவே, ஐஏஎஸ் எண்ணத்துடன் நீங்கள் தயாராகிவிட்டால், உங்களை யாராலும் மாற்றிட முடியாது. வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யின் மேலாண்மை இயக்குநர் தீனதயாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யின் பயிற்சியாளர் சந்துரு, மாணவ, மாணவியர்களின் கேள்வி, சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியை எஸ்.நெளஷாத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை சேலம் சிடிஎன் தொலைகாட்சி இணைந்து வழங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in