

சென்னை
விசாரணையின்போது கைதிகளுக்கு கை, கால்முறிவு ஏற்பட்டதாக எழுந்த புகாரின் மீது விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை அளிப்போம் என டிஜிபி தெரிவித்துள்ளதாக தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் எச்.எல்.தத்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் அளிக்கப்பட்ட புகார்கள் மீதும் பிற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட பல வழக்குகள் என மொத்தம் 179 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. சென்னையில் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2 நாட்கள் இந்த சிறப்பு விசாரணை நடந்தது.
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நடைபெற்ற விசாரணையில், ஆணைய உறுப்பினர்கள் நீதிபதி கே.சி.பந்த், ஜெய்தீப் கோவித், ஜோதிகா கல்ரா, டாக்டர் தியானேஷிவர் எம்.முலே ஆகியோரும் தமிழக அரசு சார்பில், தலைமைச் செயலாளர் கே. சண்முகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கொத்தடிமை பிரச்சினை
இந்த விசாரணை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் எச்.எல்.தத்து மற்றும் உறுப் பினர்கள் கூறியதாவது:
பாதிக்கப்பட்டவர்கள் புகாரின்பேரில் கொத்தடிமை பிரச்சினை, போலீஸாரின் துன்புறுத்தல் போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் ஒரு நபரின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் நலம் பெற வேண்டி 20 சிறுமி களின் கன்னங்களில் அலகு குத்தப் பட்டது குறித்தும் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் 2 வழக்குகளுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம்.
மேலும், 41 வயது நபரை போலீஸார் 63 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து தாக்கி அவரது காலை உடைத்தது உள்ளிட்ட வழக்கும் விசாரிக்கப்பட்டன. இவ்வாறு 179 வழக்குகளில் 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மற்ற வழக்குகளில், அதிகாரிகள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம், நூற்பாலைகளில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மாற்றுத் திறனாளிகள் நல சட்டத்தை முறையாக செயல்படுத்தாதது உட்பட 10 பொது பிரச்சினைகள் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் புகார் அளித் துள்ளன. இதில், ஒரு புகாருக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சமீபகாலமாக விசாரணை கைதி களை போலீஸார் தாக்கி கை, கால் களில் எலும்பு முறிவை ஏற்படுத்தி காயப்படுத்துவதாக புகார் அளிக்கப் பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட 91 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த டிஜிபி, ஒரு குழுவை நியமித்து அதன் மூலம் தமிழக சிறைகளில் விசாரணை நடத்தி அடுத்த ஒரு மாதத்துக்குள் அறிக்கை அளிப்போம் என தெரி வித்துள்ளார்.
இவ்வாறு எச்.எல்.தத்து தெரிவித் தார்.