

மதுரை
மதுரை அருகே ஓட்டிப் பழகியபோது, கள்ளந்திரி கால்வாய்க்குள் விலை உயர்ந்த கார் ஒன்று புகுந்தது. இதில் கார் ஓட்டுநர் உயிர் தப்பினார்.
மதுரை கள்ளந்திரி புதுப்பாலம் அருகே கள்ளந்திரி பிரதான கால்வாய்க்குள் விலை உயர்ந்த கார் ஒன்று தண்ணீரில் மிதந்தது. இது பற்றி அப்பன் திருப்பதி போலீஸாருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தகவல் வந்தது.
போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். எதிர்பாராதவிதமாக நள்ளிரவில் கார் கால்வாய்க்குள் பாய்ந்து, ஓட்டுநர் உள்ளிட்ட அதில் பயணித்தவர்கள் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் தேடினர். யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு வாகனம் மூலம் தண்ணீரில் மிதந்த காரை மீட்டனர்.
இந்நிலையில் மதுரை கேகே. நகர் லேக் ஏரியாவைச் சேர்ந்த முகமது அசாருதீன் (33) என்பவர் அங்கு வந்தார். அவர் தண்ணீரில் மிதப்பது தனது கார் எனக் கூறினார். கேகே.நகரில் பகுதியில் பேக்கரி நடத்தி வருவதாகவும் சென்னையில், 2009-ம் மாடல் கொண்ட விலை உயர்ந்த கார் (பிஎம் டபிள்யூ) ஒன்றை பழைய விலைக்கு வாங்கியதாகவும் கூறினார்.
காரை அவ்வப்போது, ஓட்டிப் பழகி வந்துள்ளார். நேற்று இரவு 2 மணிக்கு மேல் தனியாக அழகர்கோயில் வரை சென்றுவிட்டு, மீண்டும் திரும்பியபோதே இந்த விபத்து நடந்ததாக அவர் கூறினார்.
அழகர் கோயிலில் இருந்து கள்ளந்திரி புதுப்பாலம் அருகே வந்தபோது ரோட்டை விட்டு, வலது புறமாக காரைத் திருப்ப முயல, கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலுள்ள பிரதான கால்வாய்க்குள் இறங்கியது என அவர் போலீஸில் தெரிவித்தார்.
இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த முகமது அசாருதீன் சுதாரித்துக் கொண்டு, இருக்கையைவிட்டு கீழே குதித்து உயிர் தப்பியதாகக் கூறினார். கார் மட்டும் கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது. அவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்க முயன்றுள்ளார். உடனே தொடர்பு கிடைக்காததால், ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இவை அனைத்தும் அசாருதீனிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், கால்வாய்க்குள் கார் புகுந்ததற்கு வேறு காரணம் ஏதும் இருக்கலாமா என்ற கோணத்திலும் அப்பன் திருப்பதி போலீஸார் விசாரிக்கின்றனர்.