Published : 11 Sep 2019 07:37 PM
Last Updated : 11 Sep 2019 07:37 PM

கொலிஜியம் பரிந்துரையை மதிக்கவேண்டும்; இந்தியாவில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் ஒரே மரியாதைதான்: அகில இந்திய பார் அசோசியேஷன்

கொலிஜியம் முடிவை தலைமை நீதிபதி தஹிலரமானி ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், மேகாலய தலைமை நீதிபதியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்தவேண்டும் என மத்திய அரசை அகில இந்திய பார் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணி மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த நிலையில், இதை மறு பரிசீலனை செய்ய, தலைமை நீதிபதி விடுத்த கோரிக்கையை கொலிஜியம் நிராகரித்ததால், அதிருப்தியில் ராஜினாமா செய்து, குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார்.

தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தலைமை நீதிபதியின் ராஜினாமாவை விமர்சித்தும் மாற்றுக்கருத்துகள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில் அகில இந்திய பார் அசோசியேஷன் சார்பில் கொலிஜியத்தின் முடிவை ஆதரித்தும் தலைமை நீதிபதி கொலிஜியத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தியும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் ஆதிஷ் சி. அகர்வாலா வெளியிட்டுள்ள அறிக்கை:

பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த தஹிலரமானியை நீதிபதியாக நியமனம் செய்ததோடு, அதே பம்பாய் உயர் நீதிமன்றத்தில் அவரைவிட மூத்தவர்கள் இருந்தபோதும்கூட பொறுப்பு தலைமை நீதிபதியாக மூன்று முறை நியமித்ததும், பின்னர் பாரம்பரியமிக்க சென்னை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து, 13 மாதங்களுக்கும் மேலாக பணியாற்ற வழிவகை செய்ததும் இதே கொலிஜியம் தான்.

இவ்வளவு காலம் கொலிஜியம் மீது எந்த ஒரு மாற்றுக் கருத்தையம் முன்வைக்காத நீதிபதி தஹிலரமானி, தற்போது மட்டும் மாற்றுக் கருத்தை முன்வைப்பது ஏற்புடையதல்ல எனவும், கொலிஜியம் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்காமல், பொத்தாம் பொதுவாக தன்னை இடமாற்றம் செய்வதை எதிர்த்து ராஜினாமா செய்வது என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்த போதெல்லாம் அமைதி காத்து ஏற்றுகொண்டுவிட்டு, தற்போது மேகாலயா இடமாற்றத்தை மட்டும் எதிர்ப்பது ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவின் அனைத்து உயர் நீதிமன்றங்ளுக்கும் ஒரே அதிகாரமும், மரியாதையும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு உயர் நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தை பொறுத்தும், அந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை வைத்தும் அந்த நீதிமன்றத்தை குறைவாக எடை போடுவது, அங்கு செல்ல மாட்டேன் எனக் கூறுவது தவறான முன்னுதாரணம் என்பதோடு, இப்படி ஒவ்வொருவராக சொல்ல ஆரம்பித்தால், அத்தகைய நீதிமன்றங்கள் செயல்படவே இயலாமல் போகும் அச்சம் உள்ளது.

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதை எதிர்த்து ராஜினாமா செய்திருக்கும் நீதிபதி தஹிலரமானியின் முடிவு, கொலிஜியத்தை அவமரியாதை செய்வதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியில் வசிக்கும் மக்களையும் இழிவுபடுத்துவதற்கு சமம்.

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான வழக்கு ஒன்றில், கடந்த 2017 ம் ஆண்டு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய தஹிலரமானி தண்டனை வழங்கியதன் காரணமாகவே இந்த பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் புரளி அடிப்படை அர்த்தமற்றது என தெரிவித்துள்ளது. அப்படிபார்த்தால் அந்தத் தீர்ப்புக்கு பிறகு தான் அவர் அதே பம்பாய் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கபட்டார்.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கபட்டார். மத்திய அரசு உச்சநீதிமன்ற கொலிஜியம் மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் அஜய் குமார் மிட்டல் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ள நிலையில், அந்தப் பரிந்துரையை உடனே ஏற்றுக்கொண்டு, அவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க விரைவில் வழிவகை செய்ய வேண்டும். என ஆதிஷ் சி. அகர்வாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x