வரதட்சணை கேட்டு கைவிட்ட கணவன்: 11 வயது மகனுடன் கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்த பெண்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

அரியலூர்

தன்னையும், தனது மகனையும் கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு, தனது 11 வயது மகனுடன் அரியலூர் ஆட்சியர் டி.ஜி.வினயிடம் பெண் ஒருவர் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று நித்யா (32) என்பவர் தனது 11 வயது மகனுடன் வந்தார். அவர் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

"கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ள என்.ஜெ.வி நகரில் வசித்து வந்த எனக்கும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகேயுள்ள ஓடப்பேரி கிராமத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரின் மகன் பாண்டியன் என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு இரு குடும்பத்தினரின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது எனக்கு 38 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் மதிப்பலான வீட்டுப்பொருட்கள், எனது கணவருக்கு இருசக்கர வாகனம் ஆகியவை எங்கள் குடும்பத்தினர் கொடுத்தனர். எங்களுக்கு ஒரு வருடம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது.

திருமணமான சிறிது நாட்களிலிருந்து எனது மாமியார், எனது நாத்தனார், அவரது கணவர் ஆகியோர் என்னை கூடுதலாக 50 பவுன் தங்க நகையும், ரூ.30 லட்சம் பணமும், ரூ.10 லட்சம் மதிப்பில் காரும் பெற்றோரிடம் வாங்கி வரும்படி தொடர்ந்து கேட்டு வந்தனர். இதுகுறித்து கணவரிடம் தெரிவித்தபோது, அம்மா சொற்படி கேள், இல்லையெனில் என்னை விட்டு விலகிவிடு எனக் கூறினார்.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு என்னிடம் சண்டையிட்டு என்னையும், எங்களுக்குப் பிறந்த மகனையும் எனது அப்பா வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இதனையடுத்து அப்போதே கடலூர் மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தேன். அந்த மனு நெய்வேலி காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

நெய்வேலி காவல் நிலையத்துக்கு என்னையும், எனது கணவரையும் அழைத்த போலீஸார், பிரச்சினை செய்யாமல் சேர்ந்து வாழ என் கணவரிடம் அறிவுறுத்தினர். அப்போது சரி என ஒப்புக்கொண்ட எனது கணவர் என்னுடன் வாழவில்லை.

அதன் பின் மீண்டும் புகார் கொடுத்தேன். பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் அழைத்துப் பேசினர். அவர்களிடம் வெளிநாடு செல்கிறேன். வந்தவுடன் மனைவி, மகனை அழைத்து ஒன்றாக வாழ்வதாகக் கூறிச் சென்றவர் எங்களை அழைக்கவில்லை.

பின்னர், எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கடலூர் சமூக நலத்துறையில் மனு அளித்தேன். மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் நெய்வேலி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் உடையார்பாளையம் அருகேயுள்ள கள்ளாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேறொரு பெண்ணை எனது கணவருக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். முதல் மனைவி நான் உயிருடன் இருக்கும் போது, சட்டத்துக்குப் புறம்பாக திருமணம் நடைபெற்றதாகக் கூறி மார்ச் மாதம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தேன்.

மனுவின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து எனது கணவரைச் சந்திக்கச் சென்றபோது அவர்களது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டித் தாக்கினர். காயமடைந்த நான் மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தொடர்ந்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுபோல தொடர்ந்து பல்வேறு மன உளைச்சல்களைச் சந்தித்து வரும் நானும் எனது மகனும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றோம். வயது முதிர்ந்த பெற்றோரை வைத்துக்கொண்டு மிகவும் துன்பப்பட்டு வருகிறேன். எனவே, என்னையும் எனது மகனையும் கருணைக் கொலை செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்", எனத் தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் அலுவலகத்தில் கருணைக்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டு மகனுடன் இளம்பெண் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி பெரியசாமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in