

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வுகள் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 14 ஆம் தேதி, தபால் துறை பணிகளுக்கான தேர்வுகள், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வு, இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. முன்பு, இத்தேர்வுகள் மாநில மொழிகளிலும் நடைபெறும். ஆனால், இம்முறை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெற்றது. தமிழகத்திலும் தமிழ் மொழியில் நடத்தப்படவில்லை.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மீண்டும் மாநில மொழியில் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், இதுகுறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் வலியுறுத்தினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து, தபால் துறை தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படும் என, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த 14-ம் தேதி நடைபெற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி அஞ்சல் துறை தேர்வுகள் நடைபெறும் என, இந்திய அஞ்சல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், இனிவரும் ஆண்டுகளில் அஞ்சல் துறை தேர்வுகள் மாநில மொழிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.