

சென்னை
காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் பரிசு பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையில் பணிபுரியும் நபர்கள் பரிசு பொருட்கள் வாங்குவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து டிஜிபி ஜே.கே.திரிபாதி அனைத்து காவல் நிலையங்களுக்கும், மண்டல ஐஜிக்களுக்கும், சரக டிஐஜிக்களுக்கும், மாநகர காவல் ஆணையர்களுக்கும், ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் காவல் துறை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். காவல் துறையில் பணிபுரிபவர்கள் பிறரிடம் இருந்து வெகுமதிகள், பரிசு பொருட்கள் மற்றும் வரதட்சணை வாங்கக் கூடாது என்று காவல்துறை விதியில் உள்ளது. இதை காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறி செயல்படுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் பணியில் இருப்பவர்கள் இந்த விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறார்களா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.