ஆடம்பரச் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு: மதுரையில் பெற்ற மகனையே எரித்துக் கொன்ற தாய் கைது 

ஆடம்பரச் செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு: மதுரையில் பெற்ற மகனையே எரித்துக் கொன்ற தாய் கைது 
Updated on
1 min read

மதுரை அருகே ஆடம்பரச் செலவுக்கு பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த மகனை எரித்துக் கொன்ற தாயை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள காளிகாப்பானைச் சேர்ந்தவர் பாண்டியக்காளை (55) இவரது மனைவி சரோஜா (50). இவர்களுக்கு அஜித்குமார்(21) உட்பட இருமகன்கள். மூத்த மகன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலைக்கு முயற்சித்து வருகிறார். இளையமகன் அஜித்குமார் மதுரை கே.கே. நகர் பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார். 

பாண்டியக்காளைக்கு உடல் நலமின்றி, வேலை எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் இருக்கிறார். சரோஜா சலவையகத்தில் கூலி வேலை செய்து, கணவர், பிள்ளைகளை காப்பாற்றிவருகிறார்.

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி தாய், மகனுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இரவு தூங்கிக் கொண்டிருந்த மகன் அஜித்குமார் மீது சரோஜா மண்ணெண்ணை ஊற்றி  தீவைத்தார். பலத்த தீயக்காயம் அடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சரோஜா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை போலீஸார் அவரை கைது செய்தனர். 

இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி அஜித்குமார் நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பெற்ற மகனின் சொந்தரவால் தாயே அவரை எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பைக், நண்பர்கள், ஆடம்பரச் செலவு..

இச்சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில், "கல்லூரியில் படித்த அஜித்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆடம்பரச் செலவு செய்துள்ளார். மகன்களை படிக்கவைக்க, சரோஜா வெளியில் ரூ.3 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு, பைக் ஒன்றை அஜித்குமார் கேட்டுள்ளார். வேறு வழியின்றி, கடன் வாங்கி பைக் வாங்கித் தந்தார். கடந்த 18-ம் தேதி திடீரென ரூ. 40 ஆயிரம் கேட்டுள்ளார். இந்த பணத்தை சரோஜாவால் ஏற்பாடு செய்து கொடுக்க முடியவில்லை.

தாயை மகன் மிரட்டி உள்ளார். மீண்டும் அவர் ரூ.10 ஆயிரம் ஒருவரிடம் கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இதில் அஜித்குமார் திருப்தி அடையாமல் தாய்க்கு மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார். வேதனையில் இருந்த சரோஜா  மகன் என்று கூட பாராமல் தீர்த்துக்கட்ட முடி வெடுத்து இருக்கிறார்.

இதன்படி, அன்றிரவு மூத்த மகன் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் தாய், தந்தை, அஜித்குமார் ஆகியோரும் தூங்கிய போது, நள்ளிரவில் ஒருவர் கூப்பிடுகிறார் என, சொல்லி கணவரை வெளியே அனுப்பிய சரோஜா தூங்கிக் கொண்டிருந்த அஜித்குமார் மீது மண்ணெண்ணையை  ஊற்றி தீ வைத்துள்ளார்.  சரோஜாவை கைது செய்துள்ளோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in