

களரி உட்பட நாட்டுப்புற தற்காப்பு கலைகளை கிராமப்புற சிறார்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார் அரசு பள்ளி ஆசிரியர்.
நாட்டுப்புற கலைகளை போல் களரி போன்ற நாட்டுப்புற தற்காப்பு கலைகளும் மங்கிபோய் உள்ளன. கராத்தே, குங்பூ போன்றவற்றை கற்கும் இளைஞர்களுக்கு குறுந்தடி, சிலம்பம், சிங்கப்போர், குரங்குபோர், சுவடுமுறை போன்ற நாட்டுப்புற தற்காப்பு கலைகள் கற்க ஆர்வமில்லை.
ஆசிரியரின் அரும்பணி
களரி எனப்படும் இக்கலைகளை கிராமப்புறங்களில் இளைய தலைமுறையினரிடையே பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆசிரியர் பி.ஜான் எட்வின் ராஜ். கட்டணமின்றி சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் இதற்காக பயிற்சி அளித்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குண்டாயகோணத்தை சேர்ந்த இவர் திருப்பூர் பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றுகிறார். 5 வயது சிறுவர்களில் இருந்து 60 வயது முதியவர்கள் வரை இவரிடம் நாட்டுப்புற தற்காப்பு கலைகள் கற்று வருகின்றனர்.
உன்னதமான கலை
ஜான் எட்வின் ராஜ் கூறும்போது, ‘களரி, வர்மக்கலை போன்ற திறன்மிக்க தற்காப்பு கலைகள் அகஸ்தியர், போகர், புலிப்பாணி போன்ற சித்தர்களால் நமக்கு கிடைத்தவை. உயிரினங்களின் அழிவுக்காக இவை தோற்றுவிக்கப்படவில்லை.
தன்னைத் தாக்க வரும் எதிரியை தடுத்து அவனுக்கு நல்வாக்கு உரைத்து திருப்பி அனுப்புவது தான் இதன் நோக்கம். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் எதிரியின் உடல் பாகங்களை தட்டி மயக்க நிலையில் வைத்து பின்பு அவரை எழும்ப செய்து மனம்மாற வைக்கும் உன்னதமான கலை இது.
தனித்துவம் பெற்றது
பழங்கால சுவடுமுறை பயிற்சியில் தொடங்கி சுருள்வாள், தீச்சிலம்பம் வரை பல விளையாட்டுகள் இதில் உள்ளன. சுவடுமுறையில் இரு கால்களையும் மாற்றி மாற்றி வைத்து எதிரிகளை தடுக்கும் விதம் தனித்துவம் பெற்றது. கைப்போர் பயிற்சி என்பது ஆயுதம் இன்றி தாக்க வரும் எதிரிகளை தடுக்கும் முறை.
இதைப்போல் ஆயுதம் மூலம் எதிரிகளைத் தடுக்கும் முறையான குறுந்தடி, கத்தி, இரட்டை கத்தி, பட்டா கத்தி, கண்ட கோடாரி, கேடயம், வாள், இருவாள், சிலம்பம், தீ சிலம்பம், சுருள்வாள் போன்றவையும் உள்ளன. இந்த தடுப்பு முறைகள் பழங்காலத்திலும் மன்னர்கள் காலங்களிலும் பயன்படுத்தப்பட்டன.
இத்தகைய பயிற்சிகளை பெற்ற பின் தான் ஒருவர் வர்மக்கலை பயில தகுதியாகிறார். இதுபோன்ற திறன்பெற்ற கலையை கற்க பல ஆண்டுகள் பொறுமையாய் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவேதான் இன்றைய நாகரீக நடைமுறையில் பலர் இவற்றை விரும்புவதில்லை.
ஆர்வமுள்ளோர் அணுகலாம்
தென்னிந்தியாவின் கன்னியாகுமரி எல்லையில் தோன்றிய இந்த தற்காப்பு கலை அழிந்துவிடாமல் பாதுகாக்க அரசு எந்த முயற்சியும் எடுக்காதது கவலை அழிக்கிறது. அதே நேரம் இவற்றில் உள்ள நுணுக்கங்களை சீனா மற்றும் ஜப்பானியர்கள் ஆராய்ச்சி செய்து அதன் மூலம் புதிய தற்காப்பு முறைகளை புகுத்தி வருகின்றனர்.
இக்கலையை கிராமப்புற மாணவர்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆண்டுக்கு 30 பேருக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த முயற்சி தொடர்கிறது. இதுவரை 300 கிராமப்புற சிறுவர்கள் என்னிடம் களரி கற்றுள்ளனர். ஆர்வமுள்ள சிறுவர்கள் என்னை அணுகலாம். இலவசமாக பயிற்சி அளிக்க உள்ளேன்’ என்றார் அவர்.