எம்பிபிஎஸ் இறுதியாண்டில் நெக்ஸ்ட் தேர்வு; மத்திய அரசின் முடிவுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

நாராயணசாமி: கோப்புப்படம்
நாராயணசாமி: கோப்புப்படம்
Updated on
2 min read

புதுச்சேரி

எம்பிபிஎஸ் இறுதியாண்டில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு புதுச்சேரி முதல்வர் நராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மத்திய அரசு நீட் தேர்வு, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த புதுச்சேரி மாணவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமல்லாது பலகட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.

ஆனால், மத்திய அரசானது தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற நாடாளுமன்றத்தில் கூட தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இப்பிரச்சினையை எழுப்பி, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு அமைச்சரவையில் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்டவரையறையைத் தயார் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது. தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதன் மூலம் புதுச்சேரி, தமிழகத்தில் மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

தற்போது மாநில மற்றும் மத்திய அரசின் பட்டியலில் கல்வி உள்ளது. இதனைப் படிப்படியாக மத்தியப் பட்டியலில் கொண்டு செல்ல மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இதன் முதற்கட்டமாக நீட் தேர்வைப் புகுத்தியது. இதன் மூலம் மருத்துவக் கல்வி அதிகாரத்தை மத்திய அரசு தன் கையில் எடுத்து கொண்டுள்ளது.

அதேபோல், மருத்துவப் படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வு எழுத வேண்டும் என சட்டத்தில் ஒரு ஷரத்தைப் புகுத்தியுள்ளார்கள். நான்கரை ஆண்டுகாலம் மருத்துவம் படித்துவிட்டு மத்திய அரசின் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது, நாட்டில் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தேவையில்லை. அனைத்து அதிகாரங்களும் தேசிய மருத்துவ ஆணையத்திடம் சென்று விடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய பேரிழப்பாகும்.

மக்கள் மத்தியில் படிப்படியாக மருத்துவப் படிப்புக்கான தகுதியை நிர்ணயம் செய்வதும், மருத்துவம் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும்போது, அவர்களின் இறுதியாண்டுத் தேர்வை மத்திய அரசே நடத்த வேண்டும் என்பது மாநில மற்றும் மாணவர்களின் உரிமையைப் பறிக்கின்ற செயலாகும். எனவே, இதனை முழுமையாக எதிர்க்கிறோம்.

இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரும்போது அதனை எதிர்த்து காங்கிரஸின் குரல் ஒலிக்கும். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். மத்திய அரசு மருத்துவக் கல்லூரி விஷயங்களில் நம்முடைய மாணவர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. மாநிலத்திற்கான உரிமையை மத்திய அரசு பறித்துக் கொள்ளும் நிலையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இந்தத் தகவல் நேற்று தான் எங்களுக்குக் கிடைத்தது. எனவே, பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தற்போதுள்ள முறைப்படியே மருத்துவப் படிப்புக்கான தேர்வு நடத்த வேண்டும். இதனை மாற்றி மருத்துவம் பயிலும் மாணவர்கள் கடைசி ஆண்டில் பொதுத்தேர்வு எழுதுவதை ஏற்க மாட்டோம் என்று கடிதம் எழுத உள்ளேன். இப்பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்படும்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், பாஜக ஆட்சியில்லாத மாநிலங்களில் தொடர்ந்து பாஜக தொல்லை கொடுத்து வருகிறது. தற்போது கர்நாடகத்தில் நடப்பது உச்சகட்ட அரசியல் விளையாட்டு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தங்களது எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட உரிமை உள்ளது. ஆனால், அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுகின்ற கட்சிக்கு சொல்ல வேண்டுமே தவிர, இத்தனை மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்று சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

ஆனால், கர்நாடக ஆளுநர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார். பாஜகவினர் சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்குகிறார்கள். ஜனநாயக படுகொலை முழுமையாக கர்நாடகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதனை கர்நாடக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் பாஜகவுக்கு திரும்பிப் போகும். இதுபோன்ற சூழ்நிலையை பாஜகவும் சந்திக்கின்ற நிலை உருவாகும்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார். 

அப்போது கர்நாடகத்தைப் போல் புதுச்சேரியில் பாஜக தொல்லை கொடுக்குமா? என்று முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டபோது, எந்த சூழ்நிலையையும் சந்திக்கத் தயாராக உள்ளோம், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in