

அரிக்கமேட்டில் மீண்டும் அகழ்வாய்வு நடத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் விதி 377-ன் கீழ் நோட்டீஸ் அளித்திருக்கிறார். அதன் விவரம் வருமாறு:
"புதுச்சேரியில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அரிக்கமேடு இப்போது புறக்கணிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறது. 1937 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த தொல்லியலாளர்கள் ழெ லென்டில் மற்றும் ழுவே துப்ரியோ ஆகியோர் அந்த இடத்தைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சர் மார்டிமர் வீலர் என்ற உலகப் புகழ்பெற்ற தொல்லியலாளர் அங்கு அகழ்வாய்வு செய்து அரிய பொருட்கள் பலவற்றைக் கண்டெடுத்தார்.
அரிக்கமேடு
வண்ணம் தீட்டிய மட்பாண்டங்கள், ரோம் நாட்டின் முத்திரை பதித்த ஈமத்தாழிகள், சாடிகள் உள்ளிட்ட பல பொருட்களை அகழ்வாய்வில் கண்டெடுத்தார். இந்த அகழ்வாய்வு இந்தியாவுக்கும் ரோம் நாட்டுக்கும் இடையே நடந்து வந்த வணிக உறவின் காலத்தைத் தெளிவாக நிரூபணம் செய்தன. அது கி.மு. இரண்டாம் நூற்றாண்டு அளவில் இருக்கலாம் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது இந்த இடம் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் அங்கே எந்த ஒரு அகழ்வாய்வும் நடத்தப்படவில்லை. தொல்லியல் துறையின் கீழ் இருக்கும் அந்தப்பகுதி சரியாகப் பராமரிக்கப்படவில்லை. அங்கே புதிய அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை உரிய நிதியை ஒதுக்க வேண்டும்” என அந்த நோட்டீஸில் ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
-செ.ஞானபிரகாஷ்