வாசிப்பை நேசிக்க தயாராகுங்கள்... - கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 19-ல் தொடக்கம்!

படம்: ஜெ.மனோகரன்
படம்: ஜெ.மனோகரன்
Updated on
2 min read

புத்தக வாசிப்பை நேசிப்பவர்களுக்கு குதூகலம் அளிக்கக் கூடியவை புத்தகத் திருவிழாக்கள். ஈரோட்டில் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ள சூழலில், அதற்கு முன்பாகவே கோவையில் நடைபெறுகிறது `கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2019’.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா), தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஐந்தாவது ஆண்டாக நடத்தும் புத்தகத் திருவிழா, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் வரும் 19-ம் தேதி முதல்  28-ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 19-ம் தேதி மாலை நடைபெறும் தொடக்க விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி புத்தகத் திருவிழாவைத் தொடங்கிவைக்கிறார்.

இது தொடர்பாக புத்தகத் திருவிழா தலைவர் பி.விஜய்ஆனந்த், கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் டி.பாலசுந்தரம், நடராஜன், அறிவுக்கேணி அமைப்பு தலைவர் இ.கே.பொன்னுசாமி, கவிஞர் கவிதாசன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “புத்தகத் திருவிழாவையொட்டி ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து நடத்தப்பட்ட,  பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வரும் 20-ம் தேதி மாலை 3 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றன. இப்போட்டிக்காக 3,000 கட்டுரைகளை மாணவ, மாணவிகள் அனுப்பிவைத்துள்ளனர்.

அதில் 1,000 பேருக்கு சிறப்பு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டிக்காக வழங்கப்படும் பரிசுகளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையாகும். 

இந்த ஆண்டு முதல், இளம் படைப்பாளி களுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகள், புனைவு, புனைவுசாரா மற்றும் கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்பட உள்ளன. புனைவுக்கு உண்டான இளம் சிறுகதை ஆசிரியர் விருது குணா கந்தசாமிக்கும், இளம் கவிஞருக்கான விருது சோலை மாயவனுக்கும், புனைவுசாரா உரைநடைக்கான விருது குருசாமிக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் தலா ரூ.25,000 ரொக்கப் பரிசு, பாராட்டுப் பட்டயம் கொண்டவையாகும்.

வரும் 21-ம் தேதி, விருது பெறும் இளம் படைப்பாளர்களின் படைப்புகள் குறித்த திறனாய்வு அரங்கம், ‘அங்கதத் தமிழ்’ என்ற  சிறப்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. அன்று மாலையில் எழுத்தாளர்களுக்கான வாழ்நாள் சாதனை யாளர் விருது வண்ணநிலவனுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பட்டயம் கொண்டது.வரும் 22-ம்
தேதி பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தொடர்ந்து, அறிவுக்கேணி அமைப்பு, கோவை ரோட்டரி சங்கங்கள் இணைந்து, 100 பள்ளிகளில் நூலகங்கள் அமைக்கும் தொடக்க விழா நடக்கிறது. இதையொட்டி, தமிழருவி மணியனின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி புதிய நூல்கள் வெளியீட்டு விழா, ஆன்மிகச் சொற்பொழிவாளர் சுகி சிவத்தின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

வரும் 24-ம் தேதி `பாரதி யார்?’ என்ற தலைப்பில் மகாகவி பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் நடைபெற உள்ளது.வரும் 25-ம் தேதி கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இசை நிகழ்ச்சி, 26-ம் தேதி 50 பெண் கவிஞர்கள் பங்கேற்கும் ‘பெண்பா’ சிறப்பு கவியரங்கம்,  மும்பை டப்பா வாலா குழுவினரின் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி, 27-ம் தேதி கவிஞர் கவிதாசன் தலைமையில், தொழிலாளர்களுக்கான நிகழ்ச்சிகள், கருத்தரங்கம்  நடைபெற உள்ளன.

250 அரங்குகள்...

இந்த புத்தகத் திருவிழாவில் 150 பதிப்பாளர்களின்,  250 நூல் விற்பனை அரங்குகள், தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், டெல்லி மாநிலங்களில் இருந்து வரும் பதிப்பாளர்களின் அரங்குகள் இடம் பெறுகின்றன. 

லட்சக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன.ஒவ்வொரு நாளும் மாலையில் புகழ்பெற்ற அறிஞர்கள், கலைஞர்கள் பங்கேற்கும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவற்றில் வண்ணதாசன், கலாப்ரியா, சுகி சிவம், தமிழருவி மணியன், இ.ரெ.சண்முகவடிவேல், முனைவர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அறிவுக்கேணியின் சார்பாக நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளும், சான்றிதழ் களும் வழங்கப்பட உள்ளன. மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டுக்கூடங்களும் அரங்கில் அமைக்கப்பட்டுள்ளன. 

அவிநாசி சாலையில் இருந்து கொடிசியா வளாகம் வரை வந்து, செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புத்தகத் திருவிழாவுக்கு வருவார்கள் என்றும், ரூ.3.50  கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழா, கண்காட்சியைக் காண அனுமதி இலவசம்” என்றனர்.

வாசிப்பு நகரமாக கோவையை மாற்ற முயற்சி!

ரூட்ஸ் குழும மனிதவளப் பிரிவு இயக்குநர் கவிஞர் கவிதாசன் கூறும்போது, “புத்தகத் திருவிழா, கண்காட்சி என்பது மாணவ, மாணவிகள், கல்வியாளர்களுக்கு மட்டுமானது அல்ல. விவசாயிகள், தொழிலாளர்கள் என எல்லா தரப்பினருக்குமானது. புத்தகத் திருவிழாவையொட்டி, எங்கள் நிறுவனத்தில் ரூ.400 மதிப்பிலான புத்தக கூப்பன்களை, ரூ.200-க்கு வழங்குகிறோம்.

இதேபோல, பல்வேறு தொழில், வர்த்தக நிறுவனங்களும், தங்கள் தொழிலாளர்களை புத்தகங்கள் வாங்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். புத்தக வாசிப்பை பரவலாக்கி, தொழில் நகரமான கோவையை வாசிப்பு நகரமாகவும்  மாற்ற வேண்டுமென்பதே எங்கள் இலக்கு”என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in