

விருதுகளை வழங்குவது மட்டுமின்றி சமூகத்தில் தங்களுக்கு உரிய அந்தஸ்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு குப்பை சேகரிப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குப்பை சேகரிப்பவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு விருது மற்றும் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், தேசிய அளவில் குப்பை சேகரிப்பவர்கள் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு அடுத்தாண்டு முதல் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இது குப்பை சேகரிப்போர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தாம்பரம் பகுதியில் குப்பை சேகரித்து வரும் மணிகண்டன் என்பவர் கூறியதாவது:
நான் கடந்த 4 ஆண்டுகளாக தாம்பரம் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். குப்பை சேகரிப்பவர்களுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், விருது வழங்குவதைவிட எங்களுக்கு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம். அத்துடன் சமூகத்தில் எங்களின் அந்தஸ்தை உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை கொடுங்கையூரில் குப்பை சேகரிக்கும் ராணி கூறும்போது, “குப்பை சேகரிப்பதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.80 முதல் ரூ.150 வரை கிடைக்கும். எங்களுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான். ஆனால், விருது கொடுப்பதைவிட அரசாங்கமே எங்களுக்கு ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.200 கொடுக்கலாம்” என்றார்.
இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் கூறும்போது, “ஒருவர் தனது வீட்டை சுத்தம் செய்வது அவருடைய வேலை. ஆனால் நாட்டை சுத்தம் செய்வது அரசாங்கத்தின் கடமை. அன்றாடம் குப்பை சேகரித்து பிழைப்பவர்களுக்கு விருது கொடுப்பது நல்ல முயற்சி என்பது போன்ற தோற்றம் உள்ளது. ஆனால் அந்த அறிவிப்பு குப்பைகளை சேகரிக்கும் மனிதர்கள், அதே பணியை கடைசி வரை செய்ய வேண்டும் என்ற மனநிலையையே காட்டுகிறது” என்றார்.