தமிழகம் உலகுக்குத் தந்த தவப்புதல்வன்: வைகோ புகழஞ்சலி

தமிழகம் உலகுக்குத் தந்த தவப்புதல்வன்: வைகோ புகழஞ்சலி
Updated on
2 min read

தமிழர்களுக்கு புகழ் வழங்கிய இதயத்துடிப்பு அடங்கிவிட்டது என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''கடல் அலைகள் தாலாட்டும் ராமேஸ்வரத்தில் எளிய இஸ்லாமிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, அறிவியல் மேதையாக அவனியில் பேர் பெற்று, கோடானு கோடி மக்களின் ஏக்கக் கனவுகளை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக குடியரசுத் தலைவர் பதவி நாற்காலியில் அமர்ந்து, வளரும் இளம் தலைமுறையினர் விண்முட்டும் சாதனைகளைப் படைக்க வழிகாட்டிய அக்னிச் சிறகுகளை தந்து ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த ஏந்தல் அப்துல் கலாம் மறைந்துவிட்டார்! தமிழர்களுக்கு புகழ் தந்த இதயத் துடிப்பு அடங்கிவிட்டது!

உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை விளக்கிய மணிவிளக்கு ஆவார் அவர். கிரேக்க தேசத்தின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் ஆற்றிய உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். அந்த உரையில்தான், சங்கத்தமிழினுடைய உன்னதத்தை, பழந்தமிழர் நாகரிகத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழரின் கோட்பாட்டை எடுத்துரைத்தார். தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் உலகளாவிய பெருமை சேர்த்தார் அப்பெருமகனார்.

வாழ்க்கைப் போராட்டத்திலும். சமூகப் போராட்டங்களிலும் எதிர்கொள்ள நேரும் தடைகளை ஆபத்துகளை நெஞ்சுறுதியோடு சந்திக்க தயாராகுங்கள்! “எல்லா நாளும் ஆயத்தமாகுங்கள்; அனைத்து நாட்களையும் சமமாகக் கருதுங்கள். நீ பட்டறையாக இருக்கும்போது உன் மீது விழும் அடிகளைத் தாங்கிக்கொள்; நீயே சம்மட்டியாக மாறும்போது உன் தாக்குதலைத் தொடங்கு” என்ற அப்துல் கலாமின் மணி வாசகங்கள் இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக மாணவர் உலகத்துக்கு இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான பொன்மொழியாகும்.

கலாம் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு அவர் டெல்லிக்குச் செல்லும் விமானத்தில் நானும் பயணித்ததால், அவர் அமர்ந்துள்ள இடம் நோக்கிச் சென்று கைகூப்பி வணங்கி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என் இருக்கைக்குத் திரும்பினேன். சில நிமிடங்கள் கழித்து என்னை அழைத்து, என்னைப் பாராட்டி நான்கு வரிகள் எழுதிய கவிதையை அவர் எனக்குத் தந்தார். மெய்மறந்து போனேன். இந்த மமாமனிதர் மனதில் அடியேனுக்கும் ஒரு இடமா! என திகைத்தேன்.

2002 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக யாரை வேட்பாளராக்குவது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை நடந்தபோது, அன்றைய தலைமை அமைச்சர் அடல் பிகாரி வாஜ்பாயிடம், அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற கருத்தைச் சொன்னவனும் அடியேன்தான். இரண்டாவது முறையும் அவரே குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற கருத்தை அதிமுக, தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சி தலைவர்களிடம் இந்த எளியேன் முன்வைத்தேன். அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக சொல்லாததால் தான் வேட்பாளராகப் போட்டியிட மறுத்தார் அப்துல் கலாம்.

2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு அப்துல் கலாம் தாக்கல் செய்த வேட்புமனுவில் முன்மொழிந்த வாஜ்பாய் உள்ளிட்டவர்களோடு, நானும் ஒருவனாக முன்மொழிந்தேன்.

ஈழத் தமிழர் இனக்கொலை செய்த கொடியவன் ராஜபக்சே 2014 ல் இந்தியப் பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் மாளிகை அசோகா அரங்கத்தில் நுழைந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் அந்த மாபாவியின் கரம் குலுக்கி வரவேற்றபோது, அதே வரிசையில் அமர்ந்திருந்த அப்துல் கலாம் எந்த அசைவும் காட்டாமல் அவனை அலட்சியப்படுத்தி தமிழரின் தன்மானத்தை நிலைநாட்டிய உத்தமரன்றோ!

உயிர் ஓய்ந்து உடலால் அவர் மறைந்தாலும் இந்த மண்ணும், கடலும், வானும் இருக்கும்வரை அவரது புகழும் நிலைத்திருக்கும்.

தமிழகம் உலகத்துக்குத் தந்த தவப்புதல்வனை இழந்து துயரத்தில் துடி துடிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in