அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலி: உடனே நிரப்ப அன்புமணி கோரிக்கை

ஒரே நாளில் 5000 பேர் ஓய்வு
அன்புமணி

அன்புமணி

Updated on
1 min read

சென்னை: ‘தமிழக அரசுத் துறைகளில் ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அரசுத்துறையில் காலிப் பணியிடங்கள் 5 லட்சத்தைக் கடந்த நிலையில், அவற்றை உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.

தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.

2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>அன்புமணி </p></div>
‘ரீல்ஸ்’ வெளியிடும் தவெக எம்எல்ஏக்கள் - ஆய்வுக்கு செல்ல தயங்கும் அதிகாரிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in