

சென்னை: மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1,000 ஏசி மின் பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் வகையில், மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,000 புதிய குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள்
கொள்முதல் செய்திடவும், இந்த பேருந்துகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பணிமனைகளில் ஏற்படுத்தவும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து சேவை நவீனமயமாக்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட்டு, பயணிகளுக்கு மேம்பட்ட மற்றும் வசதியான போக்குவரத்து சேவை கிடைக்கும்.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் தற்போது 755 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 355 பேருந்துகள் குளிர்சாதன வசதி கொண்டவை ஆகும்.
ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்புதல்
அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், இயக்கத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும், ரூ.17.99 கோடி மதிப்பீட்டில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தப்படும் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் கடந்த செப். 8-ம் தேதி அறிவித்தார்.
இதன்படி, எட்டு போக்குவரத்துக் கழகங்களின் 13,490 வாகனங்களில் இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகளும், 13,776 அவசர உதவி பொத்தான் தொகுப்புகளும் பொருத்த ஏதுவாக முதல்வர் விஜய், போக்குவரத்து கழங்களுக்கு ரூ.17.99 கோடி விடுவிக்க ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.