

சென்னை: சென்னை ஒன் செயலியில் 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) ஏற்படுத்தப்பட்டது.
இந்த குழுமம் வாயிலாக ‘சென்னை ஒன்’ என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த செப்.22-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட இந்த செயலி மூலமாக மெட்ரோ ரயில், மின்சார ரயில், மாநகர பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை கியூஆர் குறியீடு வழியாக பெறலாம்.
இந்த 3 சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித் தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும். அறிமுகம் செய்யப்பட்டது முதல் பொதுமக்கள் இடையே இந்த செயலி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
தொடந்து இந்த செயலியில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன. மாநகர பேருந்துகளுக்கான மாதாந்திர பாஸ் பெறும் வசதி, ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பஸ், ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் ஆகியவை கொண்டு வரப்பட்டன.
இந்த செயலி பேருந்துகளில் சில்லரை பிரச்சினை, ரயில், மெட்ரோ நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்திருப்பது உள்ளிட்ட சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை ஒன் செயலியில் 50 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், செயலி அறிமுகப்படுத்தப்பட்ட போது தினமும் சராசரியாக 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், தற்போது, 35 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை விற்பனையாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.