ஜெயலலிதாவுடன் நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு: தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது தமிழகத்தில் அதிமுக பெற்ற வெற்றிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் மோடிக்கும், அவரது அரசுக்கும் முதல்வர் ஜெயலலிதா நல்வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதோடு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஒரு நல்லிணக்கம் நிகழும் அர்த்தமுள்ள சகாப்தமாக இந்த ஆட்சிக்காலம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
மோடி பேச்சு
இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவை, நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மதியம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தன்னை வாழ்த்தி முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத்துக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற மகத்தான வெற்றிக்கும் வாழ்த்து கூறினார். முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமராக பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி புரிய நரேந்திர மோடியை வாழ்த்தினார். இந்த தொலைபேசி உரையாடலின்போது தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணக்கமான உறவு நிலவுவது உறுதி என்று முதல்வரிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் வாழ்த்து
நரேந்திர மோடியைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கும் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக பெற்ற மாபெரும் வெற் றிக்கு தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ராஜ்நாத் சிங்குக்கு நன்றி தெரிவித்த முதல்வர், பாஜக பெற்ற வெற்றிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
