வரிகள், கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தலாம்: 22 மாவட்டங்களில் 152 இ-சேவை மையங்கள் - முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

வரிகள், கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தலாம்: 22 மாவட்டங்களில் 152 இ-சேவை மையங்கள் - முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்
Updated on
1 min read

பொதுமக்கள் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஒரே இடத்தில் செலுத்தவும் வருவாய்த்துறை சான்றுகளை பெறவும் வசதியாக 22 மாவட்டங்களில் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 152 இ-சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களை செலுத்தவும் இதர சேவைகளை பெறும் வகையிலும் சென்னை மாநகராட்சியில் 10 இடங்களில் இ-சேவை மையங்கள் தொடங்கப் படும் என்று 2014-15-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது.

அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகரில் 14 இ-சேவை மையங்கள் மற்றும் இ-சேவை இணையதளத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். இதன்மூலம் இதுவரை சுமார் 52 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, எல்காட் நிறுவனம் மூலம் கரூர் மாவட்டம் புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூ ராட்சி அலுவலகத்தில் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 15-ம் தேதி தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

இதேபோல சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, நெல்லை உட்பட 22 மாவட்டங்களில் ரூ.4 கோடியே 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

இந்த மையங்களில் வருமானம், சாதி, இருப்பிடம் மற்றும் குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண் களுக்கான சான்று உட்பட வருவாய்த்துறையின் அனைத்து சான்றிதழ் வழங்கும் சேவைகளும், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட சமூக நலத்துறை திட்டங்கள் சார்ந்த சேவைகளும் வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, முக்கூர் என்.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் ஜெ.குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், எல்காட் நிர்வாக இயக்குநர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in