விவசாயிகளுக்கு விரோதமான பாஜக அரசு: இளங்கோவன் தாக்கு

விவசாயிகளுக்கு விரோதமான பாஜக அரசு: இளங்கோவன் தாக்கு
Updated on
1 min read

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூரியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கடந்த ஜனவரி முதல் இதுவரை 1400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் கூறும்போது, மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதாமோகன்சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்களின்படி தற்கொலைக்கான காரணங்களில் காதல் விவகாரம், ஆண்மையின்மை போன்றவைதான் என்று அவர் கூறியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். இதை தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்திலும் நியாயப்படுத்தியுள்ளார். இவரது ஆணவமிக்க பதில் நாடு முழுவதும் கண்டனக் கணைகளை எழுப்பியுள்ளது.

விவசாயிகளின் உரிமைகளை காக்கிற வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பாஜக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களை கூறியிருப்பது கண்டு விவசாயிகள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் தற்கொலைக்கான காரணங்களில் முக்கியமானதாக கருதப்படுவது கடன் தொல்லை மற்றும் பயிரிழப்புதான். அதிக வட்டியில் கடன் பெற்று விவசாயிகள் தொல்லையில் சிக்கக் கூடாது என்பதற்காக 4 சதவீத வட்டியில் கடந்த மத்திய காங்கிரஸ் அரசு 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஆனால் பாஜக அரசோ 11 சதவீதமாக வட்டியை உயர்த்தி, விவசாயிகளை வஞ்சிக்க முயன்றது.

விவசாயிகளின் தற்கொலை சாவு என்பது ஒரு சமூகப் பிரச்சினையாகும். அதில் கடன் தொல்லை போன்ற காரணங்களால் 36 சதவீதத்தினர் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதை தடுப்பதற்கான முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபடாமல் விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிற வகையில் பொறுப்பற்ற முறையில் மத்திய விவசாயத்துறை அமைச்சரே பேசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய போக்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த கருத்தும் கூறாமல் வாய்மூடி மௌனியாக இருப்பது ஏனென்று தெரியவில்லை.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதற்கொண்டு விவசாயிகளுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு உருவாகி வருகிறது. இத்தகைய எதிர்ப்பை உதாசீனப்படுத்துகிற எந்த அரசும் நீண்டநாள் நீடித்ததாக வரலாறு இல்லை'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in