தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்

தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர்
Updated on
1 min read

மத்திய இணை அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளதை அடுத்து, தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பாஜக தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து மோடியின் அமைச்சரவையில் அவர் கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளதால் தமிழக பாஜகவிற்கு விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ இந்த தேர்தலில் பாஜகவிற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு பொன்.ராதாகிருஷ்ணனின் உழைப்பு முக்கிய காரணமாக இருந்தது. இந்நிலையில் அவர் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதால் அவரால் பழையபடி கட்சிப்பணிகளை ஆற்ற முடியாது. எனவே தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்துவதற்காக விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன ” என்றார்.

இந்நிலையில் மாநிலத்தலைவர் பதவியை கைப்பற்ற இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட சீனியர் தலைவர்கள் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். மாவட்ட மற்றும் கோட்ட செயற்குழு உறுப்பினர்கள்தான் மாநில தலைவரை தேர்வு செய்வார்கள் என்றாலும், இந்தமுறை பொன்.ராதாகிருஷ்ணன் கைகாட்டும் நபருக்குத்தான் மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும் என்கிற நிலை உள்ளது. எனவே அவரது ஆதரவாளர்களில் முக்கியமானவரான மாநில செயலாளர் மோகனராஜுலுவுக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in