

ரயில்வே துறையில் தனியாரை அனுமதிக்கலாம் என்ற பரிந்துரைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ரயில்வே துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட பிபெக் தேப்ராய் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. ரயில்வேயின் மொத்த அதிகாரத்தையும் ரயில்வே வாரியத்திடம் குவித்திடாமல், மண்டல மற்றும் கோட்ட மேலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க து அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை வரவேற்கத்தக்கதாகும்.
ஆனால், ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற பரிந்துரை மிகவும் ஆபத்தானது. ரயில்களை தனியார் இயக்க அனுமதியளித்தால், ஆட்சியாளர்களின் ஆதரவுடன் அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும். அதிக லாபம் தரும் வழித்தடங்களிலும், பயணிகள் அதிகம் வருகிற நேரங்களிலும் தனியார் வண்டிகள் இயக்க அனுமதிக்கப்படும். இதனால் அரசு ரயில்கள் நஷ்டத்தில் ஓடும் நிலை உருவாகும்.
தனியார் நிறுவனங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்களின் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற பரிந்துரை, கட்டணக் கொள்ளைக்கு வழி வகுக்கும். இதனால் ரயில் பயணம் என்பது பணக்காரர்களுக்கானதாக மாறி விடும். சரக்குக் கட்டணங்கள் உயர்த்தப்படும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயரும்.
ரயில்வே ஊழியர்களின் குடும்பங்களுக்காக மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை நடத்தத் தேவையில்லை; வேண்டுமானால் தனியாரிடமிருந்து இந்த சேவைகளை பெற அவர்களுக்கு மானியம் வழங்கலாம் என்னும் பரிந்துரை ரயில்வே ஊழியர்களின் கல்வி மற்றும் மருத்துவ உரிமைகளை பறிக்கும் செயல் ஆகும்.
பொதுவாக பொருளாதார வல்லுனர்களுக்கு வருவாய் பெருக்கம் பற்றி மட்டும்தான் தெரியும்; ஏழை மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை இருக்காது என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் தான் பிபேக் தேப்ராய் குழுவின் பரிந்துரைகள் அமைந்துள்ளன'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.