

மாமல்லபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக எண்ணூர் வரை ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய சாலை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டதும் இத்திட்டத்துக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2000-ம் ஆண்டு 50 லட்சத்து 12 ஆயிரத்து 810 ஆக இருந்த வாகனங்களின் எண்ணிக்கை, கடந்த மார்ச் நிலவரப்படி 2.01 கோடியாக அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் 1.5 கோடியை எட்டியுள்ளன. மொத்தமுள்ள வாகனங்களில் 30 சதவீதம் சென்னையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 11 லட்சம் வாகனங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சென்னையில் இருந்து புறநகர் பகுதிக்கு செல்லவும், புறநகர் பகுதியில் இருந்து உள்ளே வரவும் 40 நிமிடங்கள்தான் ஆகும். ஆனால், இப்போது அதிகபட்சமாக 2.30 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுகிறது. பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்கள் 1.5 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நிற்பதை பார்க்க முடிகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாமல்லபுரத்தில் இருந்து எண்ணூருக்கு ஸ்ரீபெரும்புதூர் வழியாக புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையில் 2012-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது ஆய்வுப் பணிகளை முடித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
மாமல்லபுரத்தில் இருந்து எண்ணூர் துறைமுகத்தை இணைக்கும் வகையில் 162 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இதற்கான முழுமையான ஆய்வுப் பணிகளை முடித்துள்ளோம். ஒரு சில மாற்றங்களை செய்து விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். மத்திய அரசின் ஒப்புதல் பெற்றவுடன் ஜப்பான் நிதி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மாமல்லபுரத்தில் இருந்து திருப்போரூர், சிங்கபெருமாள்கோவில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளை யம், புதுவாயல் வழியாக இந்த சாலை அமைக்கிறது. சில மாற்றங்களை செய்து இத்திட்டத்தை 129 கி.மீ.க்குள் முடிக்க மாற்று வழி இருக்கிறது என்பதையும் வலியுறுத்தி உள்ளோம்.
மாமல்லபுரத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரை 4 வழிச் சாலையாகவும், சிங்கபெருமாள்கோவில் முதல் எண்ணூர் வரை 6 வழிச் சாலையாகவும் அமைகிறது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்ததும் திட்டப் பணிகள் தொடங்கப்படும். முதல்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்குவோம். இத்திட்டம் நிறைவடைந்தால், வரும் காலங்களில் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் 40 சதவீதம் வரை குறையும். வெளி மாநிலங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்கள், சென்னை மாநகர் உள்பகுதிக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.