

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கந்தசாமி, டெபாசிட் தொகையை நாணயங் களாக செலுத்தினார். அவற்றை எண்ணும் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள். படம்; ம.பிரபு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் நாளிலேயே சென்னையில் முதல்வர் ஸ்டாலின், தவெக வில் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அதிமுகவில் அசோக் உட்பட 47 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வில்லிவாக்கம் தொகுதியில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சிட்கோ நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் இல.மைதிலியிடம், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 6 மாதங்களாக இந்த தொகுதியில் பயணம் செய்து வருகிறேன்.
வில்லிவாக்கம் தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம்கூட கிடையாது. எம்எல்ஏ.க்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்பதை முதல்வர் ஆய்வு செய்தாரா? என்பது தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததும், 3 மாதத்துக்கு ஒருமுறை எம்எல்ஏ ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.
வில்லிவாக்கத்தை முன்னேற்றமான தொகுதியாக மாற்றுவோம்’’என்றார். வில்லிவாக்கம் தொகுதியில் 2 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் வில்லிவாக்கம் திருமலை நகரைச் சேர்ந்த 60 வயதான கந்தசாமி, மனுத்தாக்கலின் போது டெபாசிட் தொகையான ரூ.10 ஆயிரத்தை, சில்லறையாக அதிகாரிகளிடம் வழங்கினார்.
அவர் கொடுத்த ரூ.2, ரூ.10, ரூ.20 சில்லறைக் குவியலைக் கண்டு அதிகாரிகள் திகைத்துப் போயினர். பின்னர் அவற்றை எண்ணுவதற்கு நீண்ட நேரமானதால், அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
2011 முதல்தவறாமல் அனைத்து சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களிலும் சுயேச்சையாக போட்டியிடும் கந்தசாமியின் இந்த ‘சில்லறை' டெபாசிட் விவகாரம், தேர்தல் களத்தில் சுவாரசியமான பேசுபொருளாக மாறியுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு, தவெக சார்பில் பிரபல கல்வி நிறுவனத்தின் மேலாளரான மரிய வில்சன் நேற்று 2 மனுக்களை தாக்கல் செய்தார். மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெண்ணிலா தாயுமானவன் மற்றும் சுயேச்சைகள் சார்பில் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். நாம் தமிழர் சார்பில் எஸ்.வெற்றி தமிழன், மாற்று வேட்பாளராக ஆர்.ஆரோக்கியதாஸ், தாக்கம் கட்சி சார்பில் எம்.கீதா வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெ.செபாஸ்டின் 2 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். மதுரவாயல் தொகுதியில் நொளம்பூர் பாரதிசாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் வேட்பாளர் ரேவதி 2 மனுக்களும், மாற்று வேட்பாளராக பிலோமினாவும் மனுத்தாக்கல் செய்தனர்.
இது தவிர சுயேச்சைகளாக என்.ஏ. மணி, வெங்கடேசன் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். ராயபுரம் தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் ஏ.பாபு மயிலனும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முகமத் மீராவும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். இதுதவிர நாம் தமிழர் சார்பில் சவுந்திரபாண்டியன்லூடர்சேத், வீரத்தியாகி விசுவநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியில் கே.ஏழுமலை மனுதாக்கல் செய்தனர்.
எழும்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எ.சரண்யா இம்ரான் மட்டுமே நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதுதவிர, விருகம்பாக்கம் தொகுதிக்கு நாதக வேட்பாளர் சந்தோஷ், ஆனந்த் (மாற்று வேட்பாளர்) மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இசக்கிமுத்து நாடார், லுக்மான்பாபு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அண்ணாநகர் தொகுதியில் தாக்கம் கட்சி சார்பில் பா.ஆனந்த், சுயேச்சை வேட்பாளர் லோ.நரேந்திரன் மனுத்தாக்கல் செய்தனர். சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீவித்யா, நாம் இந்தியர் கட்சியில் சவுந்திரராஜன், சுயேச்சை கந்தசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மயிலாப்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அருண், தவெகவின் வெங்கட்ரமணன், தமிழக திராவிடர் கட்சி சார்பில் மூர்த்தி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். தி.நகர் தொகுதியில் தவெக வேட்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த், தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி, சுயேட்சை குமார் ஸ்ரீஆகிய 3 பேர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜி.சரவணன மூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திரு.வி.க. நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், தாக்கம் கட்சி சார்பில் செல்வகுமார் ஆகிய இருவர் பட்டாளத்தில் உள்ள திரு.வி.க நகர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பால் பிரின்சி ராஜ்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.கே. அசோக் 3 மனுக்களும் மற்றும் நாம் தமிழர் சார்பில் மோ.கீர்த்தனா, சுயேட்சை வேட்பாளர் எஸ்.ராஜசேகர் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதியில் யாரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி களில் 47 வேட்பு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.