

ஆக்கப்பூர்வமான யோசனைகளை சொன்னால் தந்தையோடு சமா தானம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக எம்.ஏ.எம்-மின் சுவீகார புதல்வர் ஐயப்பன் என்ற முத்தையா தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராம சாமிக்கும் அவரது சுவீகார புதல்வர் முத்தையாவுக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர் களை சந்தித்தார் முத்தையா. அவர் அளித்த பேட்டி விவரம்:
உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் அடிப்படையில் என்னதான் பிரச்சினை?
‘‘தினமும் நான் அவரைப் போய் பார்க்க வேண்டும். அதற்கு முன்பாக, அவரைச் சுற்றி இருப்பவர்கள் எந்த நிர்வாகத்தில் யாரை டிரான்ஸ்ஃபர் செய்யவேண்டும், யாருக்கு புதிதாக வேலை கொடுக்கவேண்டும் என அவருக்கு துண்டுச் சீட்டு கொடுத்திருப்பார்கள். நான் போன தும் அதை அப்படியே என்னிடம் கொடுத்து நடைமுறைப்படுத்தச் சொல்வார். அவர் சொன்னதை எல்லாம் நான் செய்திருந்தால் இந்நேரம் கம்பெனியை இழுத்து மூடியிருப்போம். அப்படி நடக்காமல் தடுத்ததுதான் அவருக்கு பிடிக்கவில்லை.
உங்களின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்துவிட்டதாக எம்.ஏ.எம். அறிவித்துவிட்டாரே?
அப்படி எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அப்படியே இருந்தாலும் அது எப்படி சாத்தி யமாகும்? ஒருத்தனை புள்ளையா கூட்டிட்டு வருவீங்க.. இருபது வருசம் கழிச்சு ‘நீ புள்ள இல்ல போடா’ன்னு சொல்லுவீங்களா? சட்டப்படி சுவீகாரம் எடுக்கப்பட்ட ஒருவரை சாதி வழக்கப்படி ரத்து செய்வதாக சொல்வதே சட்டவிரோ தம். இதில் மென்மையான போக்கை கடைபிடிப்பதால் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை’’
செட்டிநாடு அரண்மனையில் நடந்த பிரச்சினை தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்து நட வடிக்கை எடுத்ததன் பின்னணியில் உங்களுக்கு ஆளும்கட்சி ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறதே..?
அப்படி எல்லாம் எதுவுமில்லை. புகாரில் உண்மை இருந்ததால் போலீஸ் நடவடிக்கை எடுத்தார்கள். நான் ஊரில் இல்லாதபோது என்னுடைய அறையின் பூட்டை உடைத்ததால் போலீஸுக்குப் போனேன். எனது தந்தையைச் சுற்றி இருக்கும் ஆறேழு பேர் அவரை தவறான பாதைக்கு வழிநடத்துகிறார்கள். அவர்களால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆபத்து இருக்கிறது. அதனால்தான் எனது குடும்பத்தை சிங்கப்பூரில் வைத்திருக்கிறேன். எனக்கும் போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக் கிறேன்’’.
எனக்கு பணிவிடை செய்யும் பரிச்சயமான நபர்களை வேலை யிலிருந்து தூக்கிவிட்டார் முத்தையா என்று எம்.ஏ.எம். சொல்கிறாரே?
‘‘அவருக்கு பணிவிடை செய்து கொண்டே துணை வேந்தர் வேலை யும் பார்க்கிறார்களே. அதனால் தான் ஒருத்தர் இரண்டு பள்ளிக் கூடம் நடத்துகிறார், இன்னொருத் தர் இரண்டு காலேஜ் நடத்து கிறார். அங்குள்ள ஒவ்வொருவரும் பத்திலிருந்து ஐம்பது கோடிக்கு அதிபதிகள். மேலும் மேலும் அவர் களுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் எனது வேலையா?’’
இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
கடந்த இருபது வருடங்களாக எனது ரத்தத்தையும் வியர்வை யையும் சிந்தி செட்டிநாடு குழு மத்தை வளர்த்திருக்கிறேன். எனது தந்தைக்கு வயதாகி விட்ட தால்தான் நிர்வாகப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டேன். ஆனால், அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அதனால் நான் அவருக்கு எதிரியாகி விட்டேன்.
யாரையாவது அவர் எதிரியாக பார்த்துவிட்டால் அவரை ஒழிக் காமல் விடமாட்டார். இப்போது நான் அவருக்கு எதிரியாகிவிட்டேன். அவராக மனம் திருந்தினால்தான் உண்டு. எங்களுக்குள் சமாதானம் செய்துவைக்க பல பெரியவர்கள் முயன்று தோற்றுவிட்டார்கள். எனக்கு அவர் ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் சொன்னால் இப்போதே நான் அவரிடம் சரண்ட ராகி சமாதானமாக போகத் தயார். அந்த யோசனை அபிவிருத்திக் கானதாக இருக்க வேண்டுமே தவிர அழிப்பதற்கானதாக இருக்கக் கூடாது.
தந்தைக்கு பிறகு மகனுக்குத்தானே சொத்துகள் போகும். அதற்குள் ஏன் முத்தையா இவ்வளவு அவசரப்படுகிறார் என்று உங்கள் சமூகத்திலேயே கேட்கிறார்களே?
‘‘நியாயமான கேள்விதான்.. ஆனால், இரண்டே இரண்டு மாதங்கள் தந்தையின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் இருந்தால் கம்பெனியின் வளர்ச்சி இருபது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடுமே.. அப்புறமாக என் கைக்கு நிர்வாகம் வந்தாலும் இழப்பை ஈடுகட்ட முடியுமா? இருக்கின்ற காலம் வரை எனது தந்தை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இந்த வயதில் அவர் நிம்மதியை தொலைத்துவிட்டு நிற்பதை நினைத்தால் எனக்கே வருத்தமாக இருக்கிறது. இழந்த நிம்மதியை மீண்டும் பெறுவதற்கு அவருக்கு நல்ல ஆலோசகர்கள் கிடைக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கி றேன்’’.