

‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று அறிவிப்பார்’ என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறும்போது, ‘சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்பு, நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. ஐ.ஐ.டி.யின் ஒழுக்கத்தை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 47 நாள் வெளிநாட்டு பயணத்தால் ரூ.7.63 லட்சம் கோடி அந்நிய முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் பிரதமரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறுகின்றனர். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (ஜூன் 8) அறிவிப்பார்’ என்றார் அவர்.