

திருத்தணி வரை செல்லும் மின்சார ரயில்களை புத்தூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் நடிகை ரோஜா கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜா, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அசோக் கே அகர்வாலை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட ஏகாம்பர குப்பம், நகரி, வேப்பகுண்டா, பூடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குடிநீர், இருக்கை, நடைமேடைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தர வேண்டுமென்று ஏற்கனவே மனு அளித்தேன். அதன்படி, ஏகாம்பர குப்பத்தில் ரூ.2.95 கோடி செலவில் சுரங்கபாதை அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து மும்பை செல்லும் தாதர் விரைவு ரயில் நகரியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். இதுபோல் மற்ற விரைவு ரயில்களையும் நகரியில் நிறுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயில்களை புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும். சென்னை – திருப்பதி இடையே ஏசி பெட்டிகள் கொண்ட டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்க கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ரோல் மாடல்
தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா ஐந்தாவது முறை பதவியேற்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்தான் என்னுடைய ரோல் மாடல். அவரால், தமிழகத்துக்கு நல்லது நடக்கும். கர்நாடக அரசு ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.