

கமுதி ராமசாமிபட்டியைச் சேர்ந்த கோபால் (19), இவரது பெரியப்பா பாண்டி, பெரியம்மா பாக்கியலெட்சுமி, இவர்களின் மகன் வீரக்குமார் (17) ஆகியோர் மீது கமுதி போலீஸார் நகை திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் கோபால் போலீஸார் தாக்கியதாக கடந்த 15 நாள்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பின் உண்மை கண்டறியும் குழுவினர் ராமசாமிப்பட்டிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து எவிடன்ஸ் இயக்குநர் ஆ.கதிர் கூறியதாவது:
கமுதி போலீஸார் 4 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். நகை திருட்டு தொடர்பாக 4 பேர் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாக்கியலெட்சுமியை பெண் என்று பாராமல் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர். போலீஸாரின் இந்த சித்திரவதை கடும் கண்டனத்துக்குரியது.
4 பேர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்த போலீஸார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யவும், பாக்கியலெட்சுமியை தாக்கிய போலீஸார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும், சம்பந்தப்பட்ட போலீஸாரை பணியிடை நீக்கம் செய்யவும் வேண்டும்.
சித்திரவதை செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்காத ராமநாதபுரம் எஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கும் காவல்துறை இயக்குநர் உத்தரவிட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட கோபாலுக்கு ரூ.5 லட்சமும், மற்ற மூவருக்கும் தலா ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.