மதுவால் அழிந்த குடும்பம்: கணவன் - மனைவி தற்கொலையால் நிர்கதியான 6 மாத குழந்தை

மதுவால் அழிந்த குடும்பம்: கணவன் - மனைவி தற்கொலையால் நிர்கதியான 6 மாத குழந்தை
Updated on
1 min read

சென்னையில் கணவனின் குடிப்பழக்கம் காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த கணவன், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (30). இவரது மனைவி ஜாக்குலின் (26). இவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சஞ்சி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக ராதாகிருஷ்ணன் வேலைக்கு செல்லவில்லை. மேலும் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகியிருந்தார். குடிப்பதை நிறுத்துமாறு ராதாகிருஷ்ணனை ஜாக்குலின் வலியுறுத்த இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ராதாகிருஷ்ணன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஜாக்குலினை ராதாகிருஷ்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஜாக்குலின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். போதையில் இருந்த ராதாகிருஷ்ணன் சிறிது நேரத்துக்கு பின்னர் அறைக்கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜாக்குலின் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன், ராயப்பேட்டையில் உள்ள ஜாக்குலினின் தாயாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பழவந்தாங்கல் - பரங்கிமலை இடையே உள்ள ரயில் பாதையில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுப் பழக்கத்தால் கணவன், மனைவி இருவரும் உயிரை விட, அவர்களின் 6 மாத பெண் குழந்தை பெற்றோரை இழந்து தவித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in