

தொழில் அதிபர் எம்.ஏ.எம். ராமசாமியின் வீட்டுக்குள் புகுந்து வளர்ப்பு மகன் ஐயப்பனும் அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தியதையடுத்து, போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் அதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கும் அவரது வளர்ப்பு மகன் முத்தையா என்ற ஐயப்பனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர். சொத்துக்களை கைப் பற்றுவதில் இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள எம்.ஏ.எம். ராமசாமியின் செட்டிநாடு அரண்மனை வீட்டிற்குள் அவரது வளர்ப்பு மகன் ஐயப்பன் அடியாட்களுடன் புகுந்து அரண்மனை பொருட்களை அடித்து உடைத்ததாகவும், அதை தடுக்க வந்த ஊழியரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்.ஏ.எம்.ராமசாமி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ‘‘23-ம் தேதி இரவு 11 மணியளவில் ஐயப்பன் மற்றும் அவர் அழைத்து வந்த நபர்கள் செட்டிநாடு அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த முகப்பு கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து உடைத்தனர். இதை தடுத்த ஊழியர்களையும் தாக்கினர்.
இதில் லட்சுமணன் என்ற ராமன் என்ற ஊழியரின் தலையில் அடிபட்டு ரத்தம் வந்து விட்டது. அவரை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். என்னையும், எனது பாதுகாவலர் களையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் ஐயப்பன். கொலை செய்யும் நோக்கில் தாக்குதல் நடத்திய ஐயப்பனையும், அவர் அழைத்து வந்த சுமார் 50 அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
எம்.ஏ.எம். உருக்கம்
‘தி இந்து’விடம் பேசிய எம்.ஏ.எம்-மின் உதவியாளர்கள், “முத்தையாவின் சுவீகாரத்தை ரத்து செய்த பிறகு நகரத்தார் சமூகத்தினர் பெரும்பாலானவர்கள் முத்தையாவை ஒதுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை அவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதனால், தொடர்ந்து ஐயாவுக்கு (எம்.ஏ.எம்) பல வகையிலும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
செட்டிநாட்டு குழுமத்திலிருந்து முத்தையாவால் விலக்கப்பட்ட சிலரை தனது சொந்தப் பணத்தில் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார் எம்.ஏ.எம். அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவும் தனது சொந்தச் செலவுகளுக்காகவும் தனக்குச் சொந்தமான ஹைதராபாத் பங்களாவை அண்மையில் பத்துக் கோடி ரூபாய்க்கு விற்று விட்டார். ராஜா சர் குடும்பத்தில் பிறந்தவருக்கு சொத்தை விற்றுச் செலவு செய்யும் நிலை.
இதேபோல், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள 88 ஏக்கர் காபி எஸ்டேட்டையும் விற்று விட எம்.ஏ.எம். முடிவெடுத்தார். இதற்கு தடை கோரினார் முத்தையா. நீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. இதற்கிடையில், நகரத்தார் மத்தியில் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காக ’நமது செட்டிநாடு’ என்ற பத்திரிகையை தொடங்கினார் முத்தையா. இதற்கான வெளியீட்டு விழாவில் வி.ஐ.பி-க்களை கலந்து கொள்ளாமல் தடுத்துவிட்டார் எம்.ஏ.எம். இதையெல்லாம் சகித்துக் கொள்ளமுடியாமல் தான் ஆட்களை திரட்டி வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் போயிருக்கிறார்’’ என்று கூறினர்.
எம்.ஏ.எம்-மின் உதவியாளர் ராஜேந்திரன், “தாக்குதல் நடந்தபோது நான் ஊரில் இல்லை. பணியாளர்கள்தான் இருந்தார்கள். ஐயாவுக்கும் முத்தையாவுக்கும் பிரச்சினை ஏற்பட்ட பிறகு, அரண் மனைக்குள் உள்ள தனது அறைக்கு முத்தையா வருவதில்லை. அதை அவர்கள்தான் பூட்டி வைத்திருந்தார்கள். அரண் மனையில் பல இடங்களில் இப்போது கரையான் பிரச்சி னைகள் உள்ளதால் மராமத்து செய்து கரையான் மருந்து அடிக்கிறார்கள்.
முத்தையாவின் அறைக்குள் எலிகள் செத்துக் கிடந்து நாற்றம் அடித்தது. அதை வெளியில் எடுத்துப் போட்டு அறையைச் சுத்தம் செய்வதற்காக அறைச் சாவியைக் கேட்டிருந்தோம்; அவர்கள் தரவில்லை. இதையடுத்து, எம்.ஏ.எம். உத்தரவுப்படி அறையின் பூட்டை உடைத்து மராமத்து வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.
இது சிங்கப்பூரிலிருந்த முத்தையாவுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மே 30-ம் தேதி சென்னைக்கு வரும் திட்டத்தில் இருந்தவர், சனிக்கிழமையே அவசரமாக சென்னை வந்திருக்கிறார். அதற்கு முன்னதாக மதியமே அவரது ஆதரவாளர்கள், தனியார் செக்யூரிட்டி ஆட்கள் என நாற்பது. ஐம்பது பேர் அரண்மனைக்கு வந்து இங்குள்ளவர்களோடு வாக்குவாதம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இரவு 12 மணியளவில் டி ஷர்ட்டும், பெர்முடாஸுமாய் ஆட்களை திரட்டி வந்த முத்தையா, பணியாளர்களை வாய்க்கு வந்தபடி நிதானம் தவறிப் பேசி இருக்கிறார். அரண்மனையின் முன்பக்க கண்ணாடி கதவுகளை உடைத்த அவரது அடியாட்கள், பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். மாடியில் உறங்கிக் கொண்டிருந்த எம்.ஏ.எம்-க்கு ஆட்கள் பாதுகாப்புக்கு நின்றிருந்தார்கள்’’ என்றார்.
இது தொடர்பாக எம்.ஏ.எம்.ராமசாமியை நாம் தொடர்பு கொண்ட போது, “எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போய்ட்டார். இதெல்லாம் பத்தாது என் உயிரும் வேணும்னு கேட்கிறார். அதனால்தான் நிதானமில்லாம அடியாட்களை கூட்டிட்டு வந்து அடிக்கிறார்.
எனக்காக வேலை செய்யுறவங்கள வேலையைவிட்டு எடுத்தாச்சு. அவங்கள இங்க வேலைக்கு வைச்சு நான் சம்பளம் குடுக்குறேன்யா. இதுல இவருக்கு என்ன வந்துச்சு? இங்கிருக்கிற வேலைக்காரங்களை எல்லாம் அடிச்சுத் துரத்திட்டா நான் தனி ஆளா கெடந்து சீக்கிரம் செத் துப் போயிருவேன்னு நினைக்கிறார். வந்த கூட்டம் மேல ஏறி வந்துருந்தா நிச்சயம் என்னைய கொன்னுருப்பாங்க. அப்படிக் நடந்திருந்தா ஒரேயடியா போய் சேர்ந்திருக்கலாம். தினம் தினம் செத்துப் பிழைக்கிறதுக்கு ஒரேயடியா செத்துடுறது நல்லதுய்யா. எல்லாத்துக்கும் துணிஞ்சுட்டாங்க. இதுக்கு என்ன முடிவுன்னு அந்த ஆண்டவன் தான் சொல்லணும்’’என்றார்.
அரண்மனை சம்பவம் தொடர் பாக எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளையின் அறங்காவலரும் தொழிலதிபருமான ஏ.சி.முத்தையாவிடம் கேட்டபோது, “நான் இப்போது ஊட்டியில் இருக்கிறேன். இரவே எனக்கும் தகவல் சொன்னார்கள்.எம்.ஏ.எம். சார்பில் போலீஸில் பெயர்களை குறிப்பிட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முத்தையா உள்ளிட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்தச் சம்பவத்தை முதல்வர் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம்’’ என்றார்.
இது குறித்து முத்தையா என்கிற ஐயப்பனை தொடர்பு கொண்டு பேச பலமுறை முயன்றும் அவரது தரப்பில் பேச மறுத்துவிட்டனர். இந்நிலையில், ஐயப்பன் தரப்பில் இருந்தும் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'அரண்மனை வீட்டிற்கு சென்ற எங்களை எம்.ஏ.எம்.ராமசாமியின் ஆட்கள்தான் தாக்கினர்' என்று கூறப்பட்டுள்ளது. இரு தரப்பு புகார்களையும் பெற்று பட்டினப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.