

சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்களிடம் பணமில்லாததால் கொலையுண்ட 7 பேரின் உடல்களும் மதுரையிலேயே நேற்று தகனம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சேடபட்டி அருகேயுள்ள குமாரபுரத்தில் மனைவியுடன் சேர்ந்த வாழ மறுத்த தகராறில், கணவர் கண்ணன் உட்பட 7 பேர் நள்ளிரவில் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இவர்களது உடல்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அதன்பின், அந்த உடல்களை பெற்றுச் சென்று இறந்தவர்களின் சொந்த ஊரில் அடக்கம் செய்யக்கூட உறவினர்களிடம் பணமில்லை. அந்தளவுக்கு வேலு குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களும் ஏழ்மையில் உள்ளனர்.
இதுபற்றி குமாரபுரம் கிராமத்தினர் கூறும்போது, இந்த ஊரில் 40 குடும்பங்கள் வசிக்கிறோம். பெரும் பாலானவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மழை பொய்த்துவிட்டதால் விவசா யமும் இல்லை. கூலி வேலைக்குச் செல்லவும் வழியில்லை. அதனால் பல ஆண்கள் கேரளா, ஆந்திரா மற்றும் சென்னைக்குச் சென்று முறுக்கு பிழியும் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளுமே குமாரபுரத்தில் உள்ளனர்.
ஆடு, மாடுகளை வளர்ப்பதுதான் தொழில். வேலுவின் குடும்பத்திலும் இதே நிலைதான். அவரது மகள் சுகந்தி வளர்த்த 2 பசு மாடுகளின் பாலை விற்று அந்த வருமானத்தில் பிழைத்து வந்தனர். கடைகளில் கடனுக்கு மளிகை பொருள்களை வாங்குவர். அனைவர் வீட்டிலும் இதே நிலைதான் என்றனர்.
இந்த சூழ்நிலையில், 7 பேரின் உடலையும் குமாரபுரத்துக்கு கொண்டு செல்ல வழியில்லாததால், மதுரையிலேயே அடக்கம் செய்ய உறவினர்களும், போலீஸாரும் முடிவு செய்தனர்.
நேதாஜி மெடி டிரஸ்ட் நிறுவனர் ஹரி கிருஷ்ணன் உதவியுடன் 7 உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து மூலக்கரையிலுள்ள மாநகராட்சி மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை எரியூட்டப்பட்டன.
ஊரிலிருந்து வர பயணச் செலவுக்குக்கூட பணம் இல்லாத தால், குமாரபுரத்தைச் சேர்ந்த மிக குறைந்த நபர்களே இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். இது காவல்துறையினரையே கலங்க வைத்தது.