

போலி என்கவுன்டர் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளிகளை சுட்டுக் கொன்ற ஆந்திரப் போலீஸார் மீதான வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருப்பதை வரவேற்கிறேன் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''போலி என்கவுன்டர் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளிகளை சுட்டுக் கொன்ற ஆந்திரப் போலீஸார் மீதான வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருப்பதை வரவேற்கிறேன்.
மத்திய அரசும், ஆந்திர மாநில அரசும் உடனடியாக இந்தப் பரிந்துரையை ஏற்று வழக்கினை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு, மோசமான மனித உரிமை மீறல் செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இந்த விசாரணையின் போது அடிப்படை தகவல்களைக் கூட கொடுக்க மறுத்து விட்டது என்று ஆந்திர அரசு மீது தேசிய மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இவ்வளவும் நடைபெற்ற பிறகும் கூட அதிமுக அரசு இந்த விவகாரத்தில் மனிதாபிமானமற்ற முறையில் அமைதி காத்து வருவதோடு மட்டுமின்றி ஆந்திர போலீஸாரின் அத்துமீறலை தட்டிக் கேட்க மறுக்கிறது.
ஆகவே, இந்த வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்றி, தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.