

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் 4,192 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நேற்று மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏ சி.மகேந்திரன் பேசும்போது, “உடுமலைப்பேட்டை, பிரசன்ன விநாயகர் கோயில் மிக முக்கியமான கோயிலாகும். அதற்கு குடமுழுக்கு நடத்த வேண்டும். அதேபோல மடத்துக்குளம் தொகுதிக்குட்பட்ட ஆத்தோரம் வெங்கட்ரமண சுவாமி கோயில் புனரமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியினை ஒதுக்கி விரைவில் கும்பாபிஷேகம் செய்து கொடுக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அளித்த பதிலில் கூறியதாவது: பிரசன்ன விநாயகர் திருக்கோயில், அழகுநாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களுக்கும் நிதியை ஒதுக்கி ஏற்கெனவே நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைவுப்படுத்தி விரைவில் குடமுழுக்கு நடைபெறும்.
குடமுழுக்கு நடைபெறுமா என உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 4,192 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். அதோடு மட்டுமல்லாமல் இந்த மாதத்தில் மட்டும் கூடுதலாக நடைபெறவுள்ள திருக்கோயில்களின் எண்ணிக்கை 130 ஆகும். அதையும் சேர்த்து கணக்கிட்டால் இந்த மாத இறுதிக்குள் 4,322 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்படும்.
மக்களோடு இறைவனையும், மகிழ்ச்சியோடு வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சி இது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.