“திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400+ நிறைவேற்றம்” - கனிமொழி எம்.பி தகவல்

“திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400+ நிறைவேற்றம்” - கனிமொழி எம்.பி தகவல்
Updated on
1 min read

ராமநாதபுரம்: “கடந்த தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்பட்டுள்ளது” என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் இன்று திமுக துணை பொதுச் செயலர் கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வரவேற்றார். இதில் அமைச்சர் பெரியகருப்பன், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்எல்ஏக்கள் செ.முருகேசன், தமிழரசி, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, அன்வர்ராஜா, சுந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய, வர்த்தக சங்கங்கள், மீனவ அமைப்புகள், நெசவாளர், தொழில் துறை அமைப்பினர், மிளகாய் வத்தல் வணிகள் சங்கங்கள், முஸ்லிம் ஜமாத்தார்கள், இந்து, கிறிஸ்தவ அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி கூறியது: “பல்வேறு அமைப்பினரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவை தேர்தல் அறிக்கையில் கொண்டுவரப்படும். கடந்த தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை திமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு சில வாக்குறுதிகள் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாமல் போனது. சில பரிசீலனையில் உள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகள், குறைபாடுகள், குறிப்பாக மீனவர் பிரச்சினையை குறித்த கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து தேர்தலை மையமாகக் கொண்டு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தனிநபர்கள் எதையும் பேசலாம். திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடையே நல்ல உறவு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமிதான் தினமும் பொய் பேசி வருகிறார்” எனத் தெரிவித்தார்.

“திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 400+ நிறைவேற்றம்” - கனிமொழி எம்.பி தகவல்
“பாபர் மசூதியை மீண்டும் ஒருபோதும் கட்ட முடியாது” - யோகி ஆதித்யநாத் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in