புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி சுமார் 1,000 பேரிடம் ரூ.4.25 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த 6 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சத்தியமூர்த்தி, புவனேஸ்வரி. இவர்கள் ‘சாட்சி ஸ்டார் ஏஜென்சி’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத சிட்பண்ட் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இதன் கிளை அலுவலகம் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தொடங்கப்பட்டது.
இந்த அலுவலகத்தின் பொறுப்பாளர்களாக சென்னை செங்குன்றத்தை சேர்ந்த பவானி இளவேனில் மற்றும் வெற்றிசெல்வன் (எ) ஜெயக்குமார் ஆகியோர் செயல்பட்டு வந்துள்ளனர். மேலும், புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த மதிவாணன் (38) என்பவர் இந்நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரியில் கிளை அலுவலகத்தை தொடங்கிய இந்நிறுவனத்தினர், தீபாவளி சீட்டு, பொங்கல் சீட்டு, வருடாந்திர சீட்டு, அட்சய திருதியை சீட்டு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர்.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த சீட்டு திட்டங்களில் சேர்ந்துள்ளனர். 2022-ல்
தீபாவளி சீட்டு உள்ளிட்ட திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு சமையல் பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள், பணம் மற்றும் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி பணம் கட்டியவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு 2023-ல் சிலருக்கு மட்டுமே கொடுத்து வந்துள்ளனர். 2024-க்கு பிறகு அனைத்து சீட்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு அதன்பிறகு எதையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து பொறுப்பாளர்களிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர் மதிவாணன், புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் தீபாவளி சிட்பண்ட் உள்ளிட்ட திட்டத்தின் மூலம் 1000-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.4.25 கோடி வசூல் செய்துவிட்டு, தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, புவனேஸ்வரி, பவானி இளவேனில், வெற்றிச் செல்வன், திருவள்ளூர் வடிவேல், செங்குன்றம் லிங்கமூர்த்தி ஆகிய 6 பேர் மீதும் நேற்று முன்தினம் இரவு வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.