

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நேற்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதையொட்டி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பாதுகாப்புக்காக சுமார் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் போது (எஸ்ஐஆர்) முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கடந்த 2-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தைத் தொடங்கின. முதல் நாளில் 700-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இரண்டாவது நாளிலும் டெல்லி ஜந்தர் மந்தரில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று ஜந்தர் மந்தரில் ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்களை டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளைத் தாண்ட முயன்ற போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஏற்கெனவே டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் போது பெரும் வன்முறை ஏற்பட்டது. அதுபோன்ற சம்பவத்தைத் தடுக்க டெல்லி ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதிவிரைவுப் படை உட்பட 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதி முழுவதும் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. முக்கிய பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஜன்பத் சாலை, சன்சாத் மார்க், கேரள பவன் பகுதிகள் முழுமையாகப் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று தனித்தனியாகப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
முற்றுகை போராட்டம்: அக்டோபர் 6-ம் தேதி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று இண்டியா கூட்டணி ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதற்காக காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் டெல்லியில் குவிந்து வருகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் அக்டோபர் 10-ம் தேதி முதல் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புக்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே இளைஞர் காங்கிரஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுக் கின்றனர். எங்கள் போராட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.