இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்று: தி இந்து செய்தி எதிரொலியால் மீண்டும் செயல்படும் பூங்கா

இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்று: தி இந்து செய்தி எதிரொலியால் மீண்டும் செயல்படும் பூங்கா
Updated on
1 min read

மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நடனமாடும் இசை நீரூற்றுக்கு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மதுரை தல்லாகுளத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா (எக்கோ பார்க்) அமைந்துள்ளது. இங்குள்ள இசைக்கேற்ப நடனமாடும் செயற்கை நீரூற்று காட்சியகத்தில் சிங்கம், மனித குரங்கு, யானை, காட்டெருமை, குதிரை, மீன், ஒட்டகம், கரடி உள்ளிட்ட பிரம்மாண்ட பொம்மைகளுக்குள் ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் ஒலிபரப்பப்படும் துள்ளல் மற்றும் மெல்லிசை பாடல்களின் இசைக்கு ஏற்ப நீரூற்றுகள் எழும்பி நடனமாடும் வகையிலும், வண்ண விளக்குகள் ஒளிரும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் பிரச்சினை, உரிய பராமரிப்பின்மை காரணமாக 2 ஆண்டுகளாக இக்காட்சியகம் மூடிக் கிடந்தது. இதுதொடர்பான செய்தி கடந்த 5-ம் தேதி `தி இந்து’வில் வெளியானது.

அதைத்தொடர்ந்து மேயர் வி.வி ராஜன் செல்லப்பா அங்கு சென்று ஆய்வு நடத்தி, இசைக்கேற்ப நடனமாடும் இசை நீருற்றுகள் காட்சியகத்தை சீரமைத்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் குழாய்கள், இருக்கைகள், ஒலி பெருக்கிகளை சீரமைத்தனர்.

2 ஆண்டுகளுக்கு பின் தற்போது இந்த காட்சியம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. இதற்கு பார்வையாளர்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

காட்சியக பராமரிப்பாளர்கள் கூறும்போது, வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 7.30 மணி முதல் 8.00 மணி வரை மட்டுமே இக்காட்சியகம் செயல்படும்.

சிறுவர்களுக்கு ரூ.5, பெரியவர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 400 பேர் வரை அமரும் வகையில் இருக்கைகள் உள்ளன. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையிலேயே கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றுக்கணக்கானோர் வந்தனர். சுற்றுச்சூழல் பூங்காவுக்கு வருவோருக்கு பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in