

கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கொடியாளம் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தொடர்ந்து திருவண்ணாமலை, கடலூர் மாவட்டம் வழியாக தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கிறது.
கெலவரப்பள்ளி அணையில் தற்போது ஆகாயத் தாமரை செடிகள் அதிகளவில் படர்ந்து உள்ளது. இதனால் நீரின் ஓட்டம் பாதிக்கப்படுவதாகவும், ஆகாய தாமரை செடிகள் நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கெலவரப்பள்ளி அணையை தூய்மைப்படுத்தவும், தென்பெண்ணையாற்று பகுதியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றவும் ஓசூரைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து "தூய்மை கெலவரப்பள்ளி" என்கிற அமைப்பை தொடங்கி வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக்கில் ஆதரவு திரட்டி வருகின்றனர். “பூங்கா பறவைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான்", "பூமித் தாயை அசுத்தம் செய்யாதீர்” என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை அணைப் பகுதியில் பல இடங்களில் வைத்துள்ளனர்.
வருகிற 12-ம் தேதி கெலவரப்பள்ளி அணையை தூய்மைப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்க உள்ளதாக தூய்மை கெலவரப்பள்ளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
கெலவரப்பள்ளி அணை மூலம் 8 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பறவைகள் இங்கு அதிகளவில் முகாமிட்டு வருகின்றன. அணை பூங்காவிற்கு வரும் சிலர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அலட்சியமாக வீசிச் செல்கின்றனர். இதனால் நீர்நிலைகள் மட்டுமின்றி பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. பறவைகள் பிளாஸ்டிக் பைகளில் கூடுகட்டும் அவலம் இங்கு நிலவுகிறது. இதுகுறித்த கட்டுரை கடந்த 4-ம் தேதி ”தி இந்து” நாளிதழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அணை முழுவதும் தற்போது பச்சை நிற ஆடை போர்த்தியது போல் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து காணப்படுகிறது. இது பார்க்க அழகாகத் தெரிந்தாலும் நீர்நிலை முற்றிலும் மாசுபடுகிறது. எனவே அணையின் தூய்மை, சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் வகையில் தற்போது தூய்மை கெலவரப்பள்ளி என்கிற அமைப்பினை துவக்கியுள்ளோம்.
வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ள தூய்மை பணிக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் பலர் ஆதரவு தந்து வருகின்றனர். மேலும், ஓசூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 100-க்கும் அதிகமானோர் தூய்மை செய்யும் பணியிலும், ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியிலும் ஈடுபட உள்ளனர். நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூய்மை கெலவரப்பள்ளி அமைப்பின் ஃபேஸ்புக் பக்கம் - >https://www.facebook.com/groups/Cleankelavarapalli