

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்ததை கண்டித்து புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தின் மீது இளைஞர் காங்கிரஸார் இன்று முட்டை, தக்காளி, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகத்தின் கண்ணாடிகள் உடைந்தன. அலுவலகம் சூறையாடப்பட்டது.
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பற்றி பிரச்சினைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதற்கு நாடு முழுவதும் காங்கிரஸார் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியிலும் காங்கிரஸ் தலைவர்கள் மத்திய அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று நண்பகல் புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் இளையராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இந்திரா காந்தி சிலை அருகில் ஒன்று திரண்டனர். பின்னர், சோனியா காந்தியை விமர்சித்த மத்திய மந்திரி கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்ய கோரியும், பிரதமர் நரேந்திர மோடியைக் கண்டித்தும் கோஷமிட்டபடி, 45அடி சாலை ஜான்சி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து, பாஜக அலுவலகத்தின் முன்பு கூடிய இளைஞர் காங்கிரஸார் திடீரென முட்டை, தக்காளி மற்றும் கற்களை வீசினர். அப்போது, அலுவலகத்தினுள் இருந்த பாஜக மாவட்ட தலைவர் கோபி, கட்சி அலுவலக செயலர் வேல்முருகன் ஆகியோர் மீது முட்டை பட்டது.
இதனால் அதிச்சியடைந்த அவர்கள் அலுவலகத்தின் கதவை மூடினர். இதனையடுத்து இளைஞர் காங்கிரசாஸார் அலுவலகத்தின் வாயிலில் இருந்த சைக்கிள், கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும், அலுவலகத்தின் பெயர் பலகைகளையும் அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது பற்றி இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் இளையராஜா கூறும் போது: ‘‘பாஜக மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி விமர்சித்து வருவது காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது.
மேலும், சோனியாவைக் குறித்து விமர்சித்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையேல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களை ஒன்று திரட்டி மாநிலம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். என்றார்.’’
இதையடுத்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.