

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் வியாழக்கிழமை நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர்.
எனினும், மக்களின் இயல்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
நாடு தழுவிய அளவில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் 11 மத்திய தொழிற்சங்கங்களும், பல்வேறு மாநிலங்களில் உள்ள 43 தொழிற்சங்கங்களும் ஈடுபட்டன.
தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் ஓடின
தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடின. அதிகாலை முதலே பேருந்துகள் ஓடியதால் பயணிகள் சிரமப்படவில்லை. போக்குவரத்து தொழிலாளர்கள் போதுமான அளவுக்கு இருந்ததால் பேருந்துகள் இயக்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்வில் பாதிப்பு இல்லை.
ஆட்டோக்கள், லாரிகள் இயங்கவில்லை:
பேருந்துகள் இயக்கப்பட்ட அளவுக்கு ஆட்டோக்கள், லாரிகள் பெரும்பாலும் இயங்கவில்லை. லாரிகள் அதிகம் இயக்கப்படாததால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட போக்குவரத்து ஊழியர்கள் 4 லட்சம் பேர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
ஏன் இந்த வேலைநிறுத்தம்?
மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து 11 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாலை விபத்துகளை குறைப்பதற்காக மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்துள்ளது. இந்தக் கமிட்டி அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில், பல முக்கிய அம்சங்களைக் கொண்ட வரைவு சட்டத் திருத்தத்தை உருவாக்கியுள்ளது.
அதில், அபராதத் தொகைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500, இன்சூரன்ஸ் இன்றி ஓட்டினால் ரூ.10,000, ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டினால் ரூ.10,000, செல்போன் பேசிக் கொண்டே ஓட்டினால் ரூ.5,000, தொடர்ந்து 3 முறை சிக்கினால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற பரிந்துரைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு போன் றவற்றுக்கான கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், மாநிலங்களில் உள்ள பொது போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.