நெல்லையில் ஏடிஎம் அருகே சொந்த செலவில் பூங்கா அமைத்துள்ள காவலாளிகள்

நெல்லையில் ஏடிஎம் அருகே சொந்த செலவில் பூங்கா அமைத்துள்ள காவலாளிகள்
Updated on
1 min read

ஏடிஎம் மையம் அருகே பூங்கா அமைத்து வாடிக்கையாளர்களை குதூகலிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் திருநெல்வேலியை சேர்ந்த இரு காவலாளிகள்.

திருநெல்வேலியில் தச்சநல்லூர் ரவுண்டானா அருகே சாலையோரம் பச்சைப்பசேலென்று சிறிய திடல் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. அதையொட்டி கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் இருக்கிறது. மையத்தின்முன் எப்படி பூங்கா வந்தது என்ற கேள்வியுடன் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோதுதான் ஆச்சரியம்.

அந்த மையத்தில் காவலாளிகளாக பணிபுரியும் திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த எம்.இசக்கிமுத்து (40), தச்சநல்லூர் அருகேயுள்ள மேலக்கரையை சேர்ந்த எஸ்.சுப்பையா (45) ஆகிய இருவரின் கைவண்ணத்தில்தான் அந்த சிறிய பூங்கா உருவாகியிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் இவ்விடத்தில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டது.

அன்றிலிருந்து இங்கு காவலாளிகளாக இருக்கும் இவர்கள் 6 மாதத்துக்குப்பின் ஏடிஎம் மையத்தின்முன் பூங்கா அமைத்தனர். தங்கள் சொந்த செலவில் பூஞ்செடிகளையும், புல்தரையையும் உருவாக்கி பச்சைபசேலென்ற தோட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

தனியாரிடம் ஊதியம் பெறும் இந்த காவலாளிகள் தங்கள் சொந்த ஆர்வத்தால் இந்த தோட்டத்தை உருவாக்கி பராமரிக்கிறார்கள். இதனால் இந்த மையத்துக்கு வருவோரும், வங்கி மேலாளரும் பாராட்டியுள்ளதாகவும் இசக்கிமுத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, `இங்கு வருவோருக்கு இது மனமகிழ்ச்சியை அளிக்கிறது. பலரும் எங்களை ஊக்கப்படுத்துவது சந்தோஷமாக இருக்கிறது’ என்றார் அவர். வழக்கமாக ஏடிஎம் மையங்களின் காவலாளிகள் தனியார் நிறுவனங்கள் மூலம் பணியமர்த்தப்படுவர். பலரும் அங்குள்ள இருக்கைகளில் மணிக்கணக்கில் அமர்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் தூங்கி வழிவார்கள். அவர்களைப்போல் இல்லாமல் தோட்டம் அமைத்து பராமரிக்கும் கேவிபி ஏடிஎம் காவலாளிகள் பாராட்டுக்குரியவர்கள்தானே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in