Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM

ஆதரவற்ற குழந்தைகளை ஒரே கூட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழவைக்க வேண்டும்- மனிதநேய மருத்துவர் இளையபாரியின் லட்சியம்

இளையபாரி - இவர் மருத்துவர் இல்லை. ஆனால், தமிழகம் முழுவ தும் சுமார் 1500 குடும்பங்கள் இவரை மருத்துவருக்கும் மேலாக போற்றுகிறார்கள். சாலை விபத்து களில் சிக்கிக்கொண்ட ஆயிரக் கணக்கான நபர்களை காப்பாற்றி கரை சேர்த்திருக்கின்றன இளைய பாரியின் காக்கும் கரங்கள்.

மதுரைக்காரரான இளையபாரி யின் தாத்தா சேதுராமச்சந்திரன் சுதந்திரப் போராட்ட தியாகி. வினோ பாபாவேயின் பூமிதான இயக்கத் திற்கு தனது 5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்த முதல் தென்னிந்தியர். அந்தத் தியாக உள்ளம் இளையபாரிக்கும் அப்படியே இருக்கிறது. சிவில் இன்ஜினீயரிங் முடித்த இவர், படிக்கும்போதே காதல் ஜோடி களுக்கு திருமணங்களை செய்து வைத்தவர். இதனால், ஊருக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வெடித்த தால் 1990-ல் இவரை சென்னைக்கு கிளப்பிவிட்டார்கள் வீட்டார். ஆனாலும், 4 வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கே திரும்பிவிட்டார்.

’’நான்கு மாநிலங்களுக்கான சர்ஜிகல் உபகரணங்கள் டீலராக நாங்கள் இருந்தோம். அதனால், மருத்துவமனைகளோடும் டாக்டர் களோடும் எனக்கு நெருக்கம் இருந்தது. அதைவைத்து, பல அறுவை சிகிச்சை அரங்குகளில் ஒரு பார்வையாளனாக நான் இருந்தேன். என் கண் முன்னே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. சில பேர் சிகிச்சை பலனின்றி கண்ணை மூடி இருக்கிறார்கள். மனித உயிரின் மதிப்பை அப்போதுதான் உணர்ந்தேன். அதிலிருந்து ரோட்டில் எங்காவது விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிந்தால் நானே ஓடுவேன். ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றி நானே மருத்துவமனைக்கு கொண்டு சென்று அட்மிட் செய் வேன். ஆதரவற்றோருக்கு நானே கார்டியனாக கையெழுத்தும் போடுவேன்.

மதுரையின் பிரபல டாக்டர்கள் எல்லாமே எனக்கு பழக்கம் என்பதால் நான் அழைத்தால் தட்டாமல் சிகிச்சையளிக்க ஓடிவருவார்கள். இப்படி இதுவரை ஆயிரக்கணக்கான நபர்களை காப்பாற்றி இருக்கிறேன். 1987-லிருந்து இதுவரை 153 முறை ரத்த தானமும் செய்திருக்கிறேன்.

எனது நட்பு வட்டத்தில் 275 நேர்மையான டாக்டர்கள் இருக்கி றார்கள். நான் சொன்னால் பைசா காசு வாங்காமல் இவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். எனது உதவியால், வெறும் நூறு ரூபாயில் அறுவைச் சிகிச்சை மூலம் மகப்பேறு பெற்றவர் களும் ரெண்டாயிரம் ரூபாயில் மூட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இப்படி என்னால் சிகிச்சைக்கு உதவி செய்யப்பட்ட 1500 குடும்பங்கள் இப்போது என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்’’ என்கிறார் இளையபாரி.

பாரியின் சேவையைப் பாராட்டி சென்னையில் உள்ள ஏகம் ஃபவுண் டேஷனும், உதவும் உள்ளங்கள் அமைப்பும் ‘மனித நேய மருத்துவர்’ என்ற விருதை வழங்கியிருக்கின்றன. பொது சேவைக்காக இதுவரை தனது சொத்துகளை விற்று 25 லட்சத்துக்கும் மேல் செலவழித்திருக்கும் இளைய பாரி, இப்போது அன்றாடம் காய்ச்சி. உளவியல், குடும்பப் பிரச்சினை களுக்கு கவுன்சலிங்கும் கொடுக் கிறார்.

விவாகரத்தின் விளிம்பு வரை சென்ற பல தம்பதியர் இவரால் இப்போது இனிய இல்லறம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இவருக்குத்தான் குடும்ப வாழ்க்கை ஜெயிக்கவில்லை. ஆதர வற்ற பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில், கணவரை இழந்து ஒரு குழந்தையுடன் இருந்த பெண்ணை திருமணம் செய்தார் இளையபாரி. ஆனால், எந்நேரமும் சேவைக்காக ஓடிக் கொண்டிருந்த இவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஒத்துப்போகவில்லை. இருவரும் பிரிந்துவிட்டார்கள். இப்போது பாரி தனி மனிதர்.

தன்னுடைய உடலை மாத்திர மின்றி தனது முயற்சியில் 15 பேரை உடல் தான ஒப்பந்தம் போடவைத்திருக்கிறார் இளையபாரி. சிறுநீரகம் பாதித்து டயாலிசிஸ் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு இலவச இஞ்சி ஒத்தட சிகிச்சை கொடுத்து குணப்படுத்திவரும் பாரி, தமிழகத்தில் பல்வேறு ஆதர வற்றோர் இல்லங்களில் உள்ள 362 குழந்தைகளுக்கு காப்பாளராகவும் இருக்கிறார்.

’’தனித் தனியாய் இருக்கும் இந்தக் குழந்தைகளை எல்லாம் ஒரே கூட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ வைக்க வேண்டும். அந்த லட்சியத்தை நோக்கித்தான் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறேன்’’ என்று கூறி தனது மேன்மையான சேவைகளால் மெய்சிலிர்க்க வைக்கிறார் இளைய பாரி (தொடர்புக்கு 9360009019).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x