

நீங்கள் சிந்துகின்ற கண்ணீரோடு என்னுடைய கண்ணீரையும் கலந்து ஹனீபாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும், வாழ வேண்டும். வாழ்க, வாழ்க ஹனீபாவினுடைய புகழ் என்று திமுக தலைவர் கருணாநிதி பாடகர் ஹனீபாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''எனது ஆருயிர் நண்பரும், எனது இளமைக் காலத்திலே இருந்து, இந்த இயக்கத்திலே என்னோடு சேர்ந்து வளர்ந்தவருமான என்னுடைய அன்புக்குரிய சகோதரர் இசைமுரசு ஹனீபா நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார்.
இசை உலகத்தில் அவர் பெற்றிருந்த நற்பெயரையும், தமிழக மக்களிடத் திலே அவர் கொண்டிருந்த அன்பையும் எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன். 'அவரையா இழந்து விட்டோம்' என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இசைமுரசு என்று ஒருவரைத்தான் சொல்ல முடியும். அவர்தான் நம்மை விட்டு இன்று பிரிந்து விட்ட, என்னுடைய ஆருயிர் நண்பர் இசைமுரசு ஹனீபா அவர்கள் ஆவார்கள்.
அவரை நாம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எவ்வளவோ மரியாதையோடும், அன்போடும் நடத்தியிருக்கிறோம், அவரும் அதற்கு நன்றி மறவாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய தொண்டுகளை, தன்னுடைய பாடல்கள் மூலமாகவும் இந்த இயக்கத்திற்கு அவர் வழங்கிய தொண்டின் மூலமாகவும் ஆற்றியிருக்கிறார்.
வாணியம்பாடி தேர்தலில் ஹனீபா பாடிப் பாடி அந்த மக்களையெல்லாம் கவர்ந்த காட்சியினை அந்த மக்களில் ஒருவனாக நின்று நானும் ரசித்திருக்கிறேன்.
ஹனீபாவை அண்ணா பலமுறை பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எந்த ஒரு மாநாடும் ஹனீபாவினுடைய இசை நிகழ்ச்சி இல்லாமல் தொடங்கியதும் இல்லை. முடிந்ததும் இல்லை. அப்படிப்பட்ட என்னுடைய ஆருயிர் சகோதரரை இழந்து தவிக்கிறேன்.
நீங்கள் சிந்துகின்ற கண்ணீரோடு என்னுடைய கண்ணீரையும் கலந்து அவருக்கு, அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும், வாழ வேண்டும். வாழ்க, வாழ்க ஹனீபாவினுடைய புகழ் என்று கூறி, என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.
இன்று அவர் அமைதி பெற்றிருக்கின்றார். அந்த அமைதி தமிழகமெங்கும் தழைத்தோங்க, அவர் பட்டபாடு, ஆற்றிய பணி இவைகளெல் லாம் நமக்குத் துணையாக இருக்கட்டும் என்று கூறி, வாழ்க ஹனீபாவின் புகழ், ஹனீபா பாடிய அந்தப் பாடல்கள் என்றென்றும் நம்முடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டே இருக்கும், நம்முடைய நெஞ்சங்களிலே எதிரொலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறி, வாழ்க இசை முரசு ஹனீபா, வாழ்க, வாழ்க, வாழ்க'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.